ஊருக்குள் புகுந்தது கடல் நீர்; தீவுபோல் காட்சி அளிக்கும் கிராமங்கள்: மீனவ மக்கள் கடும் அவதி

ஊருக்குள் புகுந்தது கடல் நீர்; தீவுபோல் காட்சி அளிக்கும் கிராமங்கள்: மீனவ மக்கள் கடும் அவதி

மேன்டூஸ் புயல் காரணமாக கடலில் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்ததால் மயிலாடுதுறை மாவட்டத்தில்  பல கிராமங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

தீவாய் மாறியிருக்கும் தொடுவாய்
தீவாய் மாறியிருக்கும் தொடுவாய்

வங்க கடலில் உருவாகியுள்ள மேன்டூஸ் புயல் கரையை நெருங்கத் தொடங்கியுள்ள நிலையில்  தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. 10 அடி உயரத்திற்கு அலைகள்  எழுந்து கரையை மோதுகின்றன. இதனை முன்கூட்டியே எதிர்பார்த்து,  அரசு அறிவித்திருந்தவாறு தங்கள் படகுகளை கரையில் ஏற்றி பாதுகாப்பாக வைத்திருந்ததால்  பெரும்பாலான ஊர்களில் இதுவரை  படகுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  

ஆனால்  கடல் அலையின் அதிக சீற்றத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில்  தொடுவாய், மடவாமேடு, பூம்புகார், பழையார், கொட்டாய்மேடு, நாயக்கர்குப்பம் மற்றும் தரங்கம்பாடி தாலுகா சந்திரபாடி உட்பட பல மீனவ கிராமங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்து மீனவ மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் இருந்து ஊருக்குள் புகும் நீர்
கடலில் இருந்து ஊருக்குள் புகும் நீர்

சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் கடல் அலையின் சீற்றத்தால் கடுமையாக கடல் அலைகள் சுமார் 15 அடி உயரத்திற்கு எழுந்து வருகிறது. இதன் காரணமாக தொடுவாய் கிராமத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. சுமார் 300 மேற்பட்ட வீடுகளைச் சுற்றிலும்  கடல் நீர் சூழ்ந்து ஊரே தீவாக மாறியுள்ளது. சுமார் 100 க்கும் மேற்பட்ட வீடுகளின் உள்ளேயே தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகளின் அறிவுரையை ஏற்று  தண்ணீர் புகுந்த வீடுகளை விட்டு மீனவர்கள் குடும்பத்துடன்  வெளியேறி அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டித்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். 

இதேபோல தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள சந்திரபாடியில் நேற்று  முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக கிராம எல்லை கோயிலான பத்திரகாளியம்மன் கோயிலையும் தாண்டி கடல்நீர் உப்புகுந்து கிட்டத்தட்ட சந்திரபாடி கிராமம் முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். 

சந்திரபாடி
சந்திரபாடி

வருடாவருடம் இதே போல் புயல், மழை காலங்களில் கடல் நீர் உட்பகுந்து பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள், சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள தரங்கம்பாடியில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதால், தங்கள் பகுதியில் கடல் சீற்றத்தின்போது வருடாவருடம் கடல் நீர் உட்புகுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வாக கடல் அரிப்பை தடுக்க கருங்கற்களை கொண்டு தடுப்புச் சுவர் அமைத்து கடல்நீர் உட்புகாமல் பாதுகாக்க வேண்டும் என்ற தங்களின் 10 ஆண்டு கால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in