
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றத்தின் காரணமாக குமரி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. கேரளத்தில் கனமழை பெய்துவருவதன் எதிரொலியாக அதை ஒட்டிய குமரிமாவட்டத்தில் சாரல் மழையும், சூறைக்காற்றும் வீசி வருகிறது. அதன் எதிரொலியாக கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
தொடர் கடல்சீற்றத்தின் காரணமாக குமரிமாவட்டம், அழிக்கால் கடற்கரைக் கிராமத்தில் கடல்நீர் ஊருக்குள் புகுந்திருந்தது. இது இன்று காலை வடியத் தொடங்கி, இயல்புநிலை திரும்பினாலும் இன்னும் அழிக்கால் கடற்கரை சீற்றத்துடனே காணப்படுகிறது. அண்மையில் சுற்றுலாத்துறையால் வளர்ச்சிப்பணிகள் செய்யப்பட்ட குமரிமாவட்டம், லெமூர் கடற்கரையும் கடும் சூறைக்காற்று, ராட்சத அலைகளால் நிலைகுலைந்தது.
குமரி கடல்பகுதியில் கடும் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்தத்தைத் தொடர்ந்து குமரிமாவட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் குமரிமாவட்டத்தில் இருந்து கடல் தொழிலுக்குச் செல்லும் மூவாயிரத்திற்கும் அதிகமான வள்ளம், கட்டுமரங்கள் கடற்கரையிலேயே பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன. இதேபோல் குளச்சல், சின்னமுட்டம், தேங்காய்பட்டிணம் உள்ளிட்ட மீன் பிடித் துறைமுகங்களில் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கடல் தொழிலுக்கு செல்லாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல கடற்கரைக் கிராமங்களிலும் கடல் தொடர்ந்து சீற்றத்துடனே காணப்படுவதால் மக்கள் அச்சத்துடனே உள்ளனர்.