பட்ஜெட் அறிவிப்பு: அனைத்து துறை பள்ளிகளும் இனி பள்ளிக்கல்வித் துறையின் கீழ்!

-ஆசிரியர், மாணவர்களை பாதிக்குமா?
அரசுப் பள்ளி சிறார்
அரசுப் பள்ளி சிறார்

மாநில அரசின் பல்வேறு துறைகளின் பள்ளிகள் அனைத்தும், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் கொண்டுவரப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்புக்கு ஆசிரியர் மற்றும் மாணவர் நலன் சார்ந்து கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன.

தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. எதிர்வரும் நிதியாண்டு முதல் அந்தப் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையின் கீழாக கொண்டுவரப்பட இருக்கின்றன. இதன்படி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர் மரபினர் பள்ளிகள், இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை என அரசின் பல்வேறு துறைகளின் கீழாக இயங்கிவந்த பள்ளிகள் அனைத்தும் இனி பள்ளிக்கல்வித் துறை என்ற ஒரே குடையின் கீழ் சேர இருக்கின்றன.

இந்த மாற்றம் இதர துறை பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாதிக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. பள்ளிகள் மத்தியிலான ஆசிரியர் பணியிடங்கள் நிரவல் செய்யப்படுவதை ஒட்டி ஏற்கனவே ஆசிரியர்கள் இடையே அதிருப்தி நிலவுகிறது. தற்போது இந்த ஒரே குடையின் கீழான ஏற்பாட்டால், தங்கள் பதவி உயர்வு முன்னுரிமை உள்ளிட்டவை பாதிப்புக்கு உள்ளாகுமா என்ற கேள்வி சம்மந்தப்பட்ட ஆசிரியர் மத்தியில் எழுந்துள்ளது. இதே போன்று ஆதிதிராவிடர் நலம், பிற்பட்டோர் நலம் என சமூக அடிப்படையிலான பள்ளிகளுக்கு தனித்துவ நிதியுதவி மற்றும் விடுதி ஏற்பாடுகள் மாணவர்களுக்கு செய்யப்பட்டு வருகின்றன. இவை உள்ளிட்ட அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான சிறப்பு சலுகைகள் இனி எம்மாதிரியான மாற்றத்துக்கு ஆளாகும் என்ற கேள்வியும் அந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் வாசிப்பினூடே, ஆசிரியர் மற்றும் மாணவகளுக்கு எந்த பாதிப்பும் இன்றி இந்த மாற்றங்கள் செய்யப்படும் என அறிவித்திருக்கிறார். மேலும், பள்ளிக்கல்வித்துறையின் கீழான மாணவர் நலத்திட்டங்களை ஒருங்கே சென்று சேர்க்கவும் இவை உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பையும் தனது அறிவிப்பில் நிதியமைச்சர் உறுதி செய்துள்ளார்.

நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2 ஆயிரம் கோடியில் பல்வேறு பள்ளிசார் கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் நிதியாண்டில் ரூ1,500 கோடி செலவினத்தில் ஆய்வகம், கழிவறை உள்ளிட்டவை மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கான பல்வேறு ஸ்காலர்ஷிப் திட்டங்களும் முழுமையாக சென்றுசேரும் வகையில், அதற்கான ஒருங்கிணைந்த பிரத்யேக இணையதளம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in