புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள்hindu கோப்பு படம்

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. வாரத்தில் ஞாயிறு தவிர 6 நாட்களும் முழுமையாக வகுப்புகள் நடைபெறும் என மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 2 ஆயிரத்தை கடந்து வருகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்தும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டன. புதுச்சேரியில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் 1-ல் இருந்து 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். அதன்படி புதுச்சேரியில் இன்று 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் முடிக்கப்படாமல் இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் முழு நேரமும் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு 9-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நடைபெறுகிறது. மேலும் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். உடலின் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும், வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாணவர்கள் சாப்பிடும்போது அருகருகே உட்காராமல் சமூக இடைவெளி விட்டு உட்கார வேண்டும். இதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.