2365 இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கும் கதைப்புத்தகம் பரிசளித்த ஆசிரியை!

மாவட்ட ஆட்சியரிடம் புத்தகங்களை வழங்கும் ஆசிரியை வசந்தா
மாவட்ட ஆட்சியரிடம் புத்தகங்களை வழங்கும் ஆசிரியை வசந்தா

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர் மையங்களுக்கு, அவர்கள் மாணவர்களுக்கு கதை சொல்லிக் கொடுப்பதற்கான கதைப் புத்தகங்களை தனது சொந்த செலவில் வாங்கி பரிசளித்திருக்கிறார் வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆசிரியை வசந்தா.

நாகப்பட்டினத்தில் ஜூன் 24-ம் தேதியன்று முதலாவது புத்தக கண்காட்சி தொடங்கியது. அதில் ஒவ்வொரு நாளும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியைச் சிறப்பித்தனர். முதல் முதலாக நடத்தப்பட்ட இந்த புத்தகத் திருவிழாவை இந்த பகுதி மக்கள் வெகுவாக ரசித்து பெருமளவில் புத்தகங்களை வாங்கி சென்றனர். அந்த புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில் புத்தகக் கண்காட்சியில் புத்தகமும் வாங்க வேண்டும், அது மாணவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்று சிந்தித்த அண்டர்காடு பள்ளி ஆசிரியை வசந்தா, தன்னுடைய சொந்த செலவில் ரூ 30,000த்துக்கு 2500 கதை புத்தகங்கள் வாங்கினார். ஆசிரியை வசந்தா மாணவர்களுக்கு குடைகள், பாட புத்தகங்கள், உணவு, உடைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைத் தொடர்ந்து தனது சொந்த செலவில் செய்து வருகிறார். இந்த புத்தகத் திருவிழாவின் பயனாக மாணவர்களுக்கு கதைப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

நேற்று இரவு நடைபெற்ற நிறைவு விழாவில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர், திருமருகல் மற்றும் நாகப்பட்டினம் வட்டாரங்களில் செயல்பட்டு வரும் 2365 இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கும் தலா ஒரு கதை புத்தகம் வீதம் வழங்கிடுமாறு நாகை மாவட்ட ஆட்சியரிடம் அவற்றை ஒப்படைத்தார்.

அவற்றைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர்களிடம் அந்த புத்தகங்களை வழங்கினார்.

இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நாகை மாவட்ட தலைவர் ஆரிப், செயலாளர் பால இரணியன், நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் கோட்டாட்சியர்கள், நல்லாசிரியர்கள் கலந்து கொண்டனர். கதைப் புத்தகங்களை வழங்கிய ஆசிரியர் வசந்தாவுக்கு அனைவரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in