
படியில் தொங்காதே எனக் கண்டித்ததால் பேருந்து கண்ணாடியை மாணவர்கள் கல்லால் அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பிராட்வேயில் இருந்து இன்று மாலை பயணிகளுடன் மாநகர பேருந்து (தடம்எண் 26) ஐயப்பன் தாங்கலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் போலீஸ் பூத் பேருந்து நிலையம் வழியாக சென்றது. அப்போது பேருந்தில் ஏறிய 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர். அத்துடன் பேருந்தைத் தட்டி ஆரவாரம் செய்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் பதற்றமடைந்த பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர், மாணவர்களை பேருந்தின் உள்ளே வரும்படி பல முறை அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் கேட்காததால் மாணவர்களை பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து பேருந்து ஓட்டுநர் ஆண்டாள்பிள்ளை (51) பேருந்தை கே.கே நகர் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். நடந்த சம்பவம் குறித்து அவர் போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பி ஓடிய மாணவர்களை தேடிவருகின்றனர்.