நாவல் பழத்துக்கு ஆசைப்பட்ட மாணவர்கள்; மரம் ஏறியபோது நடந்த விபரீதம்: மின்சாரம் பாய்ந்து பறிபோன உயிர்

நாவல் பழத்துக்கு ஆசைப்பட்ட மாணவர்கள்; மரம் ஏறியபோது நடந்த விபரீதம்: மின்சாரம் பாய்ந்து பறிபோன உயிர்

பள்ளிக்குச் சென்ற மாணவன் உணவு இடைவெளியின் போது, அருகே இருந்த மரத்தில் ஏறி பழம் பறித்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், சீனிமடையைச் சேர்ந்த மருதுபாண்டியின் மகன் மனோஜ். 14 வயதான இச்சிறுவன் கொம்புகாரனேந்தலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மனோஜ் மற்றும் மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் 16 வயதான விக்னேசுவரன் ஆகியோர் நேற்று பள்ளிக்குச் சென்றிருந்தனர்.

மதிய உணவு இடைவெளியின்போது இரண்டு மாணவர்களும், மேலும் சில மாணவர்களும் சேர்ந்து பள்ளிக்கு வெளியே சென்றுள்ளனர். பள்ளிக்கு சிறிது தூரத்தில் உள்ள வீட்டில் இருந்த நாவல் மரத்தில் ஏறி உள்ளனர். மேலும், மரத்தில் உள்ள பழங்களைப் பறித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த மரக்கிளை முறிந்து அந்த மரத்தை தொட்டு சென்ற மின்சார வயர் மீது விழுந்தது. இதில், வயர் மீது விழுந்த மனோஜ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விக்னேசுவரன் பலத்த காயம் அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மானாமதுரை டவுன் காவல்துறையினர் நேரில் சென்று இறந்த மனோஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, கொம்புகாரனேந்தலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். பின்னர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in