நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவன்; தலை நசுங்கி பறிபோன உயிர்: பேருந்துப் படியில் பயணித்தபோது நடந்த சோகம்

உயிரிழந்த மாணவர் பிரபாகர்
உயிரிழந்த மாணவர் பிரபாகர்

பேருந்துப் படியில் நின்றுகொண்டு பயணித்த போது ஒன்பதாம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணித்து வருவது தொடர் கதையாக உள்ளது. இதனைத் தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று ஆணையூரில் இருந்து அனுப்பானடி வழித்தடத்தில் செல்லக்கூடிய பேருந்து தீக்கதிர் அலுவலக நிறுத்தத்தில் நின்றது. அப்போது, பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பேருந்தில் ஏறி உள்ளனர்.

இதில், பேருந்தின் முன் பக்க படியில் மாணவர்கள் சிலர் நின்றபடி பயணித்துக் கொண்டிருந்தனர். பேருந்து ஆரப்பாளையம் பகுதிக்கு வந்த போது, ஒரு மாணவன் திடீரென நிலை தடுமாறி தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது, பேருந்தில் பின்பக்க டயர் மாணவன் தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மாணவன் புது விளாங்குடியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் பிரபாகர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in