4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகத்தில் பெய்யும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு விவசாயத்தில் எந்த விதமான முடிவுகளையும் எடுக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகிறார்கள்.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்கள் உட்பட 23 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கேற்ப கடந்த மூன்று தினங்களாகவே நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று இரவு முதலே நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து இன்று நாகை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ். அதேபோல திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் தான் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும். அந்த வழக்கத்திற்கு மாறாக தற்போது செப்டம்பர் மாதத்தில் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in