மிரட்டும் 'மேன்டூஸ்' புயலால் 25 மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை: பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

மிரட்டும் 'மேன்டூஸ்' புயலால் 25 மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை: பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

'மேன்டூஸ்' புயல்  இன்று இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று  எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தமிழகத்தில் 25 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மேன்டூஸ்' புயல் நேற்று இரவு தீவிர புயலாக மாறி தமிழக கரைப்பகுதியை 12 கிலோமீட்டர் வேகத்தில் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அது இன்று இரவுக்குள் புதுவைக்கும், சென்னைக்கும் இடையே குறிப்பாக  மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போதைய நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 40 முதல் 60  கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசிக் கொண்டிருக்கிறது.  இதனால் நேற்று இரவு முதல் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இரவில்  பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  பல இடங்களில் மின்சாரமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிக்கும் மாவட்டங்களில் தேசிய பேரிடர் பாதுகாப்பு படை, மாநில பாதுகாப்பு படை மற்றும் காவலர்கள் இணைந்து மீட்பு பணிகளில்  ஈடுபட தயாராக இருக்கிறார்கள்.  மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தில் 25 மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை,  கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர்,  நாகை,  மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர்,  புதுக்கோட்டை, சேலம், கடலூர், நாமக்கல்,  திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, திருச்சி திருப்பத்தூர், சிவகங்கை,  ராமநாதபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இது தவிர தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மற்றும் சிறுமலை மலைப்பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று நடைபெறவிருந்த அண்ணாமலை பல்கலைக் கழகம்,  சென்னை பல்கலைக் கழகம், திருவள்ளுவர் பல்கலைக் கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதேபோல இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in