காலை சிற்றுண்டியை 9.45 மணிக்கு வழங்கிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்: கலெக்டர் அதிரடி நடவடிக்கை

காலை சிற்றுண்டியை 9.45 மணிக்கு வழங்கிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்: கலெக்டர் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாட்டில் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கும் நிலையில் தொடங்கிய முதல் நாளே காலை உணவை  காலதாமதமாக வழங்கியதால் பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் மாணவ - மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து கடந்த 15 ம் தேதியன்று அண்ணா பிறந்த நாளில் மதுரையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் நேற்று (செப்.16) முதல் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.  மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் திட்டத்தைத்  தொடங்கி வைத்தார்கள்.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் நகராட்சி தொடக்க பள்ளியிலும் நேற்று மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால்,  காலை உணவை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நேரத்திற்கு வழங்காமல்  நேரம் தாண்டி காலை 9.45 மணிக்கு வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகார் கிடைக்கப் பெற்றதும்  அந்த தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் குருபிரபாவை பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டார்.

மேலும் இந்த சம்பவத்தில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும்  ஆட்சியர் லலிதா  உத்தரவிட்டுள்ளார்.  திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்திருப்பது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
சமூக நலத்துறை அதிகாரிகள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் ஆகியோர்  செய்ய வேண்டிய வேலையை கண்காணிப்பது மட்டுமே தலைமை ஆசிரியரின் பணி. இதற்காக  தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு  தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in