ஆசிரியர் மனசுத் திட்டத்திற்கு திருச்சியில் தனி அலுவலகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்தார்

ஆசிரியர் மனசு திட்ட அலுவலகத்தில் மின்னஞ்சல் பார்க்கும் அமைச்சர் மகேஷ்
ஆசிரியர் மனசு திட்ட அலுவலகத்தில் மின்னஞ்சல் பார்க்கும் அமைச்சர் மகேஷ்

ஆசிரியர் மனசுத் திட்டத்திற்கென திருச்சியில் தனி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திறந்து வைத்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களின் குறைகளைக் கேட்க முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். அவரது 'ஆசிரியர்களுடன் அன்பில்' என்னும் நிகழ்வின் மூலம் தமிழ்நாடு முழுவதும் நேரடியாக ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடி வருகிறார்.

ஆசிரியர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் முழுச் சுதந்திரத்தோடு கற்பித்தல் பணியில் ஈடுபட்டால் மட்டுமே, மாணவர்களது கற்றல் பணி சிறக்கும் என்பதால் கடந்த மாதம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்த ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்வில் ஆசிரியர்களின் குறைகளைக் கேட்க மேலும் ஒரு திட்டத்தை அமைச்சர் அறிவித்தார்.

'ஆசிரியர் மனசுத் திட்டம்' என்ற அந்த திட்டத்தின் கீழ் அமைச்சரது இல்லத்திலும், அலுவலகத்திலும் ஆசிரியர் மனசுப் பெட்டி வைக்கப்பட்டு, அமைச்சரைச் சந்திப்பதற்காக வரும் ஆசிரியர்கள் காத்திருக்காமல் அந்தப் பெட்டியில் தங்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் மனுவாக எழுதி போட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்கள் தேடிவந்துதான் கோரிக்கைகளைச் சொல்ல வேண்டும் என்றில்லாமல் மின்னஞ்சல் வழியாகவும் சொல்லலாம் என தனியாக மின்னஞ்சல் முகவரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதற்காக aasiriyarmanasu@gmail.com, aasiriyarkaludananbil@gmail.com என்ற அந்த இரு மின்னஞ்சல் முகவரிகள் மூலமாக ஆசிரியர்களது கோரிக்கைகளைப் பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதற்கான தனி அலுவலகம் ஒன்றை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அறிவித்தபடி ஆசிரியர் மனசு அலுவலகத்தை திருச்சியில் செயல்படும் ஆசிரியர் இல்லத்தில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்.

அங்கிருந்த ஆசிரியர் மனசுப் பெட்டியில் உள்ள கோரிக்கை மனுக்களையும், ஆசிரியர் மனசுப் பிரிவிற்கு வந்துள்ள மின்னஞ்சல்களையும் அவர் பார்வையிட்டார். ஆசிரியர் மனசுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமாரிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் தொலைபேசி வாயிலாக நேரடியாக தானே பேசி அவர்களது கோரிக்கைகளை அமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும், அவற்றைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்தார். ஆசிரியர் மனசு அலுவலகத்திற்கு வரும் மின்னஞ்சல்களை உடனடியாகப் பரிசீலித்து, தனது கவனத்திற்கு கொண்டு வர அலுவலகப் பணியாளர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் சுவாமிநாதன், விரிவுரையாளர் ராஜ்குமார், அலுவலகத் தொடர்பாளர் கணேசன், ஆசிரியர் இல்ல மேலாளர் கண்ணன், கணினி உதவியாளர் வினு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in