பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் படுகொலை

உ.பி-யில் மீண்டும் ஓர் அவலம்
பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் படுகொலை

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், பட்டியலினச் சமூகக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பட்டியலினச் சமூகத்தினர் மீதான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகப் புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், இந்தப் படுகொலை நிகழ்ந்திருப்பது அரசியல் ரீதியிலான அதிர்வுகளை எழுப்பியிருக்கிறது. உ.பி காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா, கொல்லப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்க பிரயாக்ராஜ் செல்கிறார்.

பிரயாக்ராஜின் கோரி கிராமத்தில் வசித்துவந்த தாய், தந்தை, மகன், மகள் என நால்வரும் படுகொலை செய்யப்பட்டிருப்பது நேற்று (நவ.25) தெரியவந்தது. சம்பவம் நடந்தது உடனடியாக யாருக்கும் தெரியவில்லை என்றும், 2 நாட்கள் கழித்தே தகவல் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. கோடாரி போன்ற கூரிய ஆயுதங்களால் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். அதில் 16 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கும், அண்டை வீட்டில் வசிக்கும் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினருக்கும் இடையே நிலத் தகராறு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பலமுறை தாக்கப்பட்டிருப்பதாகவும், காவல் துறையில் புகார் அளித்திருந்தபோதிலும், போலீஸார் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு ஆதரவாக நடந்துகொண்டதாகவும், கொல்லப்பட்ட குடும்பத்தின் உறவினர் ஒருவர் கூறியிருக்கிறார்.

படுகொலைச் சம்பவம் குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, 11 பேர் மீது எப்ஐஆர் பதிவுசெய்திருக்கும் போலீஸார், சிலரைக் காவலில் எடுத்து விசாரித்துவருவதாகவும் கூறியிருக்கிறார்கள். 2019 முதல் புகார் அளித்து வந்தபோதிலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொல்லப்பட்ட குடும்பத்தின் உறவினர்கள் கோரியிருக்கிறார்கள்.

இந்நிலையில், பிரியங்கா காந்தி பிரயாக்ராஜுக்கு விரைந்திருக்கிறார். அங்கிருந்து கோரி கிராமத்துக்குச் சென்று, கொல்லப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லவிருக்கிறார்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் அரசியல் ரீதியாகப் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in