ஒருபக்கம் திசைதிருப்பிய ஜிம் மாஸ்டர்கள்; மறுபக்கம் போலீஸுக்கு போன்கால்: கையும் களவுமாக சிக்கிய போலி அதிகாரிகள்

ஒருபக்கம் திசைதிருப்பிய ஜிம் மாஸ்டர்கள்; மறுபக்கம் போலீஸுக்கு போன்கால்: கையும் களவுமாக சிக்கிய போலி அதிகாரிகள்

தங்களை அரசு அதிகாரிகள் எனச் சொல்லி போலியாக நடித்து ஜிம் மாஸ்டர்கள், உரிமையாளர்களைக் குறிவைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஏராளமான உடற்பயிற்சி கூடங்கள் உள்ளன. அண்மைக்காலமாக இங்கு ஒரு பெண் உள்பட மூன்று பேர் திடீர் என ஆய்வு மேற்கொள்வதும், தங்களை விளையாட்டுத்துறையின் உயர் அதிகாரிகள் எனச் சொல்லிக் கொள்வதுமாக இருந்தனர். ஆய்வு முடிந்து கிளம்பும் போது, உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர்களிடம் உங்கள் ஜிம்மில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதனால் லட்சக்கணக்கில் அபராதம் விதிக்க முடியும் எனச் சொல்லி பேரம் பேசி லஞ்சம் எனக் கேட்டு பெருந்தொகை வாங்கி வந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட ஜிம் முதலாளிகள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்ட தகவலின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சென்று பார்த்தனர். அப்போதுதான் அங்கே இப்படி மூவர் பணிசெய்யவே இல்லை எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஜிம் உரிமையாளர்கள் இதை வெளியில் கலைக்காமல் அனைத்து ஜிம் உரிமையாளர்களுக்கும் இதுதொடர்பாக தகவல் சொல்லி காத்து இருந்தனர்.

இந்தநிலையில் சிவகாசியில் சிவமுருகன் என்பவருக்கு சொந்தமான ஜிம்மில் பெண் உள்பட மூவர் ஆய்வு செய்வதாக சொல்லி வந்தனர். அவர்களிடம் பயந்தது போல் பேசிக்கொண்டே சிவமுருகன் ரகசியமாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு அலைபேசி மூலம் புகார் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் மதுரை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சாமிராஜ்(30), தினமணி நகர் பகுதியைச் சேர்ந்த மார்க்கரெட் இன்செண்ட் ஜெனிபர்(28), வில்லாபுரம் ரங்கராஜ்(26) ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்கள் மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் வேறு எங்கெல்லாம் இதேபோல் மோசடியில் ஈடுபட்டனர் என விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in