ராணுவ அதிகாரிகள் போல பேசி மோசடி செய்யும் கும்பல்: ஆன்லைனில் வீடு வாடகைக்கு விடுபவர்கள் ஜாக்கிரதை

ராணுவ அதிகாரிகள் போல பேசி மோசடி செய்யும் கும்பல்: ஆன்லைனில் வீடு வாடகைக்கு விடுபவர்கள் ஜாக்கிரதை

சென்னையில் ஆன்லைன் மூலம் வீடு வாடகைக்கு விடுபவர்களிடம் ராணுவ வீரர்கள் போல பேசி மோசடி செய்யும் கும்பல் களமிறங்கியுள்ளது. இதுகுறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகர் 7-வது அவென்யூ பகுதியைச் சேரந்தவர் அசோக். தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 22-ம் தேதி ஆன்லைன் மூலமாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், தனக்கு தாம்பரம் ஏர்ஃபோர்ஸ் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளதாகவும், இந்த வீட்டை வாடகைக்கு விடவேண்டி 99 ஏக்கர்ஸ். காம், நோ ப்ரோக்கர் டாட். காம் போன்ற வீடு வாடகை மற்றும் விற்பனை தொடர்பான இணையதளங்களில் விளம்பரம் செய்தததாக தெரிவித்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து திவாரி என்பவர் தன்னை வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது திவாரி ராணுவத்தில் பணிபுரிந்து வருவதாகவும், ஆன்லைன் வாடகை வீடு விளம்பரத்தில் உள்ள வீட்டின் புகைப்படத்தை பார்த்து பிடித்துள்ளதாக கூறியதாகவும், மேலும் தான் ராணுவ வீரர் என்பதை உறுதிபடுத்துவதற்காக ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் ராணுவ அடையாள அட்டை ஆகியவற்றை வாட்ஸ் அப் மூலம் அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டிற்கான அட்வான்ஸ் தொகையை ராணுவ வங்கிக் கணக்கில் இருந்து செலுத்த உள்ளதாகவும், எனவே ராணுவத்திலிருந்து வங்கிக் கணக்காளர் உங்களைத் தொடர்பு கொள்வார் என கூறியதாக குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது போல் வாட்ஸ் அப் காலில் ராணுவ கணக்காளர் ஒருவர் தொடர்பு கொண்டு ராணுவ தலைமையகத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களது வங்கிக் கணக்கிலிருந்து, ராணுவ வங்கிக் கணக்கிற்கு 3 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தினால், அதை நம்பிக்கையாக வைத்து, ராணுவ வீரர் திவாரி செலுத்த வேண்டிய வீட்டிற்கான அட்வான்ஸ் பணத்துடன், நீங்கள் அனுப்பிய பணத்தையும் திருப்பி அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி அசோக் 3 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பிய பின்னர் ராணுவ கணக்காளர் மீண்டும் வீட்டிற்கான ஆட்வான்ஸ் தொகை முழுவதையும் அனுப்புமாறும், வாடகையுடன் சேர்ந்து மொத்த பணத்தை திருப்பி செலுத்துவதாக தெரிவித்துள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட அசோக், வீட்டு உரிமையாளரான நான் எதற்கு பணம் அனுப்ப வேண்டும், என்று கேட்டுள்ளார். உடனே அந்த நபர் இணைப்பை துண்டித்து விட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அசோக் விசாரித்த போது ராணுவ அதிகாரி எனக்கூறி ஒரு கும்பல் நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அசோக் பொதுமக்கள் குறிப்பாக வீட்டு உரிமையாளர்கள் இது போன்று ராணுவ அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு வீடு வாடகைக்கு கேட்டு மோசடி செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி கூறி சமூக வலைதளத்தில் புகைப்பட ஆதாரங்களுடன் பதிவு வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே ராணுவ வீரர்கள் என தெரிவித்துக் கொண்டு, ஆன்லைனில் புல்லட், கார் உள்ளிட்டவை விற்பனை செய்வதாக கூறி பொதுமக்களிடம் நூதன முறையில் பல்வேறு மோசடிகளை வட மாநில கும்பல் அரங்கேற்றி வரும் நிலையில் தற்போது வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்களை குறி வைத்து இந்த கும்பல் மோசடியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in