மோடி மீதான மற்றொரு களங்கமும் துடைக்கப்பட்டதா?

உபயம்: பணமதிப்பிழப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
மோடி மீதான மற்றொரு களங்கமும் துடைக்கப்பட்டதா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பிரதமர் மோடி மற்றும் அவரது அரசு மீதான களங்கத்தை துடைத்தெறிந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

2016-ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தடாலடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. இதன்படி, நடைமுறையில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்கள் மதிப்பிழந்தன. ஒரே இரவில் ரூ.10 லட்சம் கோடி பொருளாதார புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டது. கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகளுக்கு எதிராகவும் இந்த நடவடிக்கை அவசியம் என பிரதமர் மோடி விளக்கினார். பயங்கவாதத்துக்கு எதிரான போரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும் முக்கிய நகர்வாக அரசு கருதியது.

ஆனால் அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு எழுந்தது. கருப்பு பணமுதலைகள், கள்ள நோட்டு களவாணிகள் ஆகியோருக்கு பதிலாக இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானியர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள். நோட்டுகளை மாற்ற உரிய அவகாசம் அளிக்கப்பட்ட போதும், இந்தியா போன்ற ஜனத்திரளும் அவர்களுக்கான சேவைக் குறைபாடும் கூடிய தேசத்தில் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

அடுத்து வந்த நாட்களில், அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்விகரமானது என்பதை தீர்மானிக்கும்படியான நிகழ்வுகள் அரங்கேறின. பாஜக ஆதரவாளர்கள் மத்தியிலும் பணமதிப்பிழப்புக்கு எதிரான கருத்தே பரவலாக எதிரொலித்தது. இதற்கிடையே பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கலாகின. அவ்வாறு பதிவான 58 மனுக்களை, நீதிபதி எச்.ஏ.நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க முடிவானது.

நீதிபதி பி.வி.நாகரத்னா
நீதிபதி பி.வி.நாகரத்னா

அதன் தீர்ப்பு இன்று வெளியான நிலையில், அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என, 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் பெரும்பான்மையான 4 நீதிபதிகள் தங்கள் முடிவை அறிவித்தனர். நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட நிலைப்பாட்டினை பதிவு செய்தார். ’நாடாளுமன்றத்தை நாடாது, ஒரே அரசாணையின் மூலம் தீவிர நடவடிக்கை எடுத்ததை ஏற்றுக்கொள்ள இயலாது’ என்றார். டிச.7 அன்றே வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அமர்வுக்கு தலைமை வகித்த நீதிபதி நாளை மறுநாள்(ஜன.4) ஓய்வு பெறவிருந்த சூழலில் இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் 2023-ம் ஆண்டின் முதல் குறிப்பிடத்தக்க இந்த தீர்ப்பு, பிரதமர் மோடி மற்றும் அவரது அரசின் மீதான மற்றொரு களங்கத்தை துடைத்துள்ளது. 2019-ம் ஆண்டின் மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான அரசு மீண்டும் தேர்வானபோதே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை உட்பட மோடி அரசின் விமர்சனத்துக்குரிய நடவடிக்கைகளை வெகுஜனம் பொருட்படுத்தவில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றம் வாயிலாகவும் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்த, ‘உறுதியான நிவாரணம் வழங்க இயலாத, கடந்த காலத்துக்கு திரும்பி செல்லுதலை ஒத்தவற்றை நீதிமன்றம் செய்ய இயலாது’ என்பது போன்றவை, நீதிமன்றத்தின் கையறு நிலையை உணர்த்துவதாக விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கின்றன. நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்குலைவுக்கு அடித்தளமிட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை, நடைமுறைக்கு உதவாத தீர்வுகள் மற்றும் வேறு சாத்தியங்கள் இல்லாததன் காரணமாகவே, இந்த தீர்ப்புக்கான நெருக்கடிக்கு நேர்ந்திருக்கிறதா என்பது உள்ளிட்ட கேள்விகளும் எழுந்துள்ளன.

மேலும், வழக்கின் தொடக்கத்தில் நீதிமன்றம் கேட்ட ஆவணங்கள், எழுப்பிய கேள்விகள் ஆகியவை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான பாதையிலே வழக்கை நகர்த்திச் சென்றது. ஆனால், தற்போதை தீர்ப்பில் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. முழுதீர்ப்பும், அதனை குறுக்குவெட்டாக ஆராயும் விமர்சனங்கள் பதிவான பிறகே நீதிமன்ற தீர்ப்பின் பொருண்மை மற்றும் பொதுவெளியின் கருத்தோட்டம் ஆகியவை தெளிவாகும்.

அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும், மோடி அரசு மீதான மற்றுமொரு களங்கத்தை இந்த நீதிமன்ற தீர்ப்பு துடைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். முன்னதாக குஜராத் கலவர வழக்கு, ரஃபேல் போர் விமான பேர வழக்கு உள்ளிட்டவை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள், மோடி மற்றும் அவர் தலைமையிலான அரசின் மீது சுமத்தப்பட்டிருந்த களங்கத்தை துடைத்திருக்கின்றன. இந்த வகையில் எதிர்வரும் மக்களவை தேர்தலில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு வாய்ப்பின்றி பாஜக களமாடவும் வாய்ப்பாகி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in