‘சிபிஐ எதிர்த்தது... உள் துறை அமைச்சகம் பரிந்துரைத்தது!’

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில் குஜராத் அரசு விளக்கம்
‘சிபிஐ எதிர்த்தது... உள் துறை அமைச்சகம் பரிந்துரைத்தது!’

பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நவம்பர் 29-ல் தொடங்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கில், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கும் குஜராத் அரசு, குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை சிபிஐ எதிர்த்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது.

2002-ல் நடந்த குஜராத் கலவரத்தின்போது, பில்கிஸ் பானு எனும் கர்ப்பிணியைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை ஒரு கும்பல் கொன்றது. இவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் ஆகஸ்ட் 17-ல் விடுதலை செய்யப்பட்டனர். குஜராத் அரசு அமைத்த குழு தண்டனைக் குறைப்பு வழங்க முடிவெடுத்ததன் அடிப்படையில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் விடுதலையாகினர்.

இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. இவ்வழக்கில் நேற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கும் குஜராத் மாநில பாஜக அரசு, அனைத்துக் கைதிகளும், ஆயுள் தண்டனை எனும் அடிப்படையில் 14 ஆண்டுக்கும் அதிகமான சிறைவாசத்தை நிறைவுசெய்துவிட்டனர் என்றும், முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான 1992 -ம் ஆண்டு கொள்கைப் படி அவர்களை விடுதலை செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும் அதில் தெரிவித்திருக்கிறது.

குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு காவல் துறைக் கண்காணிப்பாளர். சிபிஐ, மும்பை சிறப்புக் குற்றப்பிரிவு போலீஸ், சிபிஐ சிறப்பு நீதிபதி ஆகிய தரப்புகளிடமிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக குஜராத் அரசு கூறியிருக்கிறது. அதேசமயம், குஜராத் அரசு அமைப்புகளும், மத்திய உள் துறை அமைச்சகமும் முன்கூட்டியே விடுதலை செய்வதைப் பரிந்துரைத்ததாக அந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குஜராத் அரசின் பிரமாணப் பத்திரத்துக்கு பதில் அளிக்குமாறு, இந்த வழக்கின் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. பதில் அளிக்க கால அவகாசம் வழங்குமாறு மனுதாரர்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, மனுதாரர்களுக்குக் கால அவகாசம் வழங்குவதாகக் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணை நவம்பர் 29-ல் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in