ஹிஜாப் விவகாரம்: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஹிஜாப் விவகாரம்: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
உச்ச நீதிமன்றம்

ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கினை அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் உரிய நேரத்தில் இந்த வழக்கில் தலையிடுவோம் என்றும் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவருவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதனை இதர கல்வி நிலையங்களும் பின்பற்ற முயன்றன. மேலும் ஹிஜாப் மாணவிகளுக்கு எதிராக காவி துண்டு அணிந்த மாணவ மாணவிகளால் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இருதரப்பினர் இடையே பிரச்சினைகள் மூண்டன.

இந்த விவகாரம் சட்டம் ஒழுங்கு சவால்களை ஏற்படுத்தவே, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை மற்றும் 144 தடையுத்தரவு ஆகியவை அறிவிக்கப்பட்டன. மேலும், இது தொடர்பாக மாணவிகள் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு, இடைக்கால உத்தரவு ஒன்றினை வழங்கியது.

அதன்படி கல்வி நிலையங்களை திறக்க உத்தரவிட்ட நீதிமன்றம், கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஹிஜாப், காவி ஆகியவற்றுக்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்தது. ’பிப்.14 முதல் தினசரி போக்கில் இந்த வழக்கு விசாரணை தொடங்கி நடைபெறும்’ என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவுக்கு எதிராக, ஹிஜாப் மாணவியர் சார்பில் இன்று(பிப்.11) உச்ச நீதிமன்றத்தை நாடியவர்கள், இதனை அவசர வழக்காக விசாரிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். அவசர வழக்கு கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘இந்த விவகாரத்தை தேசிய அளவில் பரப்பவேண்டாம். அனைத்தையும் நாங்கள் கவனித்தே வருகிறோம். அவசியமெனில் உரிய நேரத்தில் தலையிடுவோம்’ என்று உறுதியளித்தார்.

Related Stories

No stories found.