செல்லாத ‘செக்’ வழக்குகள்: செப்டம்பர் 1 முதல் தனி நீதிமன்றங்கள்!

செல்லாத ‘செக்’ வழக்குகள்: செப்டம்பர் 1 முதல் தனி நீதிமன்றங்கள்!

செல்லாத காசோலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க செப்டம்பர் 1 முதல் தனி நீதிமன்றங்களை ஏற்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கவனம் பெற்றிருக்கிறது. நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய், எஸ். ரவீந்திர பட் அடங்கிய அமர்வு மே 19-ல் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்தத் தனி நீதிமன்றங்கள் செலாவணி முறிச் சட்டப்படி மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய ஐந்து மாநிலங்களில் முதலில் அமைக்கப்படும். இந்த மாநிலங்களில்தான் செல்லாத காசோலைகள் தொடர்பான வழக்குகள் விசாரணை அதிக எண்ணிக்கையில் நிலுவையில் உள்ளன.

இந்தத் தனி நீதிமன்றங்களில் நீதிபதிகளாக, ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். உச்ச நீதிமன்றத்தின் தலைமைச் செயலாளர் இந்த ஆணையைத் தொடர்புள்ள ஐந்து மாநிலங்களின் உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளருக்கு நேரடியாக அனுப்ப வேண்டும், அவர்கள் அந்தந்த மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளிடம் மேல் நடவடிக்கைக்காக இதை உடனடியாக அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு கட்டளையிட்டுள்ளது. இப்படியொரு யோசனையை நீதிமன்றம் நியமித்த நீதித் துறை ஆலோசகர் (அமிகஸ் குரே) அளித்திருந்தார். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் முன்னோடி திட்டமாக அமல் செய்யப்படும். அதில் கிடைக்கும் அனுபவங்கள் அடிப்படையில் பிறகு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன் தேவையேற்பட்டால் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.

2019 டிசம்பர் 31 வரையிலான காலம் வரையில் குற்றவியல் வழக்குகளில் நிலுவையில் உள்ளவற்றின் எண்ணிக்கை 2.31 கோடியாக இருந்தது. அவற்றில் 35.16 லட்சம் செல்லாத காசோலைகள் தொடர்பானது. இந்த வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்களை ஏற்படுத்த சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தி தராததால் உச்ச நீதிமன்றமே இப்போது தனி நீதிமன்றங்களை நியமிக்க உத்தரவிட்டிருக்கிறது. இந்தத் தனி நீதிமன்றங்களும் வழக்குகள் அதிகம் தேங்கியுள்ள மாநிலங்களில், தலா ஒரு மாவட்டத்தில் மட்டுமே அமைக்கப்படும். அடுத்து இந்த வழக்கு ஜூலை 26-ல் மீண்டும் விசாரிக்கப்படும்.

ஒரே பரிமாற்றம் தொடர்பாக ஒரு நிறுவனம் அல்லது நபர் மீது வெவ்வேறு வழக்குகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைத்து விசாரிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்திருந்தது. மத்திய அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதைப் போலத் தெரியாததால் உச்ச நீதிமன்றம் தானாகவே மார்ச் 5-ல் இந்த விவகாரத்தை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

பொருளாதார மந்த நிலை காரணமாக தொழில் – வர்த்தக நிறுவனங்கள் நிதி போதாமல் தவித்து வந்தன. பிறகு கோவிட் -19 பெருந்தொற்றும் அதையடுத்து அமலான பொதுமுடக்கமும் எல்லோரையும் பாதித்திருப்பதாலும் இந்த வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால் காசோலைகளை அளிப்பது குற்றம் என்றாலும் பல நிறுவனங்கள் நச்சரிப்பு தாங்காமலும், தங்களுக்கு வர வேண்டிய தொகை கைக்கு வந்துவிடும் என்று நம்பியும்கூட காசோலைகளை வழங்கக்கூடும்.

எனவே இதைத் திட்டமிட்ட மோசடியாகவும் எல்லா வழக்குகளிலும் கருதிவிட முடியாது. எனவேதான் அரசு சட்டமியற்றத் தயங்குகிறது என்கிறார்கள். ஆனால் காசோலைகளைக் கொடுத்துவிட்டு அது செல்லவில்லை என்றால் வழக்கைச் சந்திக்க நேரும். அபராதம் செலுத்த வேண்டிவரும், சிறைக்குக்கூட செல்ல நேரும் என்று தெரிந்தும் பல நிறுவனங்களும் மோசடிப் பேர்வழிகளும் இப்படி காசோலைகளை அளித்துவிடுகின்றனர். உச்ச நீதிமன்றம் எடுத்துள்ள புது நடவடிக்கையால் இந்த வழக்குகளின் எண்ணிக்கை குறையுமா என்று பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in