பிரதமர் பாதுகாப்பில் மீறல்: விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கிறது உச்ச நீதிமன்றம்!

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இந்தக் குழுவுக்குத் தலைமை வகிப்பார்
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட மீறல் குறித்து விசாரிக்க, உயர்மட்டக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்திருக்கிறது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இந்தக் குழுவுக்குத் தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘லாயர்ஸ் வாய்ஸ்’ எனும் அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹீமா கோலி ஆகியோர் அடங்கி அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

பிரதமர் மோடி பஞ்சாபில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க, ஜனவரி 5-ம் தேதி, ஃபெரோஸ்பூர் சென்றிருந்தார். அவரது வாகனமும், அவருக்குப் பாதுகாப்பு வழங்கும் சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் (எஸ்பிஜி) வாகனங்களும் ஹுசைனிவாலாவில் உள்ள தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்லும் வழியில், விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் காரணமாக பியாரென்னா கிராமம் அருகில் உள்ள மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டன. 20 நிமிடங்களுக்கு அவரது வாகனம் மேம்பாலத்திலேயே காத்திருக்க நேர்ந்தது. பின்னர், மீண்டும் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பினார். இதனால், பஞ்சாபில் அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன.

இதையடுத்து, பிரதமரின் பாதுகாப்பில் மீறல் நடந்ததாகப் பஞ்சாப் மாநில அரசு மீது பாஜக தரப்பிலிருந்தும் மத்திய உள் துறை அமைச்சகத்திலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பஞ்சாப் அரசு இதை மறுத்தது. இந்த விவகாரத்தில் நடந்தவை குறித்து விசாரிக்க பஞ்சாப் மாநில அரசும், மத்திய உள் துறை அமைச்சகமும் தனித்தனியாகக் களமிறங்கியிருந்தன. பஞ்சாப் அரசின் சார்பில் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த விசாரணைகளை ஜனவரி 10 வரை நிறுத்திவைத்து உத்தரவிட்டது. பிரதமரின் பஞ்சாப் பயணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தனது பாதுகாப்பில் வைத்திருக்குமாறு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு ஜனவரி 7-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. இந்நிலையில், இது குறித்த உத்தரவை உச்ச நீதிமன்ற அமர்வு வெளியிட்டிருக்கிறது. அதன்படி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு இதுகுறித்து சுயாதீனமாக விசாரணை நடத்தும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in