பொங்கல் பண்டிகை அன்று போட்டித் தேர்வு நடத்தும் எஸ்பிஐ: தமிழக தேர்வர்கள் அதிர்ச்சி

பொங்கல் பண்டிகை அன்று போட்டித் தேர்வு நடத்தும் எஸ்பிஐ: தமிழக தேர்வர்கள் அதிர்ச்சி

பொங்கல் பண்டிகை அன்று கிளார்க் பணியிடத்திற்கான முதன்மைத் தேர்வினை நடத்துவதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்வினை வேறு தேதியில் மாற்றி வைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 5008 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுகள் சென்னை உட்பட நாடு முழுவதும் நவம்பர் 12-ம் தேதி நடைபெற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து முதன்மை தேர்வு ஜன.15-ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதனிடையே தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அன்று தேர்வுகள் நடைபெறுவதால் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த ஆண்டு விடுமுறை நாளில் பொங்கல் பண்டிகை வருகிறது அதனைக் கவனிக்காமல் இந்த தேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எஸ்பிஐ வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 355 ஆகும். இதில், 153 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 96 இடங்கள் ஓபிசி பிரிவினருக்கும், 35 இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கும், 67 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 4 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகை அன்று அதனைக் கொண்டாடும் மனநிலையில் இருப்பதால் தேர்வர்கள் தேர்வு எழுதுவதில் சிரமம் ஏற்படும். எனவே, தேர்வினை வேறு ஒரு நாளில் தள்ளி வைக்குமாறு தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in