சயான் குடும்பத்தினரிடம் விசாரணை நடக்கிறது: கோடநாடு கொலை வழக்கில் அரசு வழக்கறிஞர் தகவல்

சயான் குடும்பத்தினரிடம் விசாரணை நடக்கிறது: கோடநாடு கொலை வழக்கில் அரசு வழக்கறிஞர் தகவல்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் மறு புலன் விசாரணையில் இதுவரை 267 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் குடும்பத்தினரிடம் கேரளாவில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு தேயிலை தோட்டத்தில் உள்ள பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு சம்பந்தமாக 5 தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் மறுபுலன் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

மாவட்ட நீதிபதி பி.முருகன் விடுமுறையில் சென்றதால் பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ், ஜித்தன் ஜாய், ஜம்சீர் அலி ஆகிய 4 பேர் மட்டும் ஆஜராயினர். மற்றவர்கள் விசாரணையில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி மனு தாக்கல் செய்தனர்.

காவல்துறை சார்பில் அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆஜராகியினர். அப்போது, அரசு வழக்கறிஞர் ஷாஜகான், ‘மறுபுலன் விசாரணையில் தற்போது வரை சசிகலா, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், எஸ்டேட்டில் பணிபுரிந்து தற்கொலை செய்து கொண்ட கணினி பொறியாளர் தினேஷின் சகோதரி, தந்தை போஜன், வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜ் சகோதரர், கனகராஜ் மனைவி உட்பட 267 நபர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி உள்ள நிலையில் கேரளாவில் உள்ள சயானின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும், சேலத்தில் உள்ள கனகராஜனின் குடும்பத்தாரிடம் மேலும் விசாரணை நடத்த இருப்பதால் கூடுதல் அவகாசம் வேண்டும்' என கோரினார். இதை ஏற்றுக்கொண்ட பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in