62 நாள் சிறைவாசம்: கடலூர் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர்!

62 நாள் சிறைவாசம்: கடலூர் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து கடலூர் சிறையில் இருந்து இன்று வெளியே வந்தார்.

நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக யூடியூபர் சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. கடந்த செப்டம்பர் 15-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு அன்று இரவே கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். கடலூர் மத்தியச் சிறையிலிருந்து வரும் சவுக்கு சங்கரை, பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து சிறை நிர்வாகத்தின் செயலை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தனது மகனை அரசியல் காரணங்களுக்காகப் பழி வாங்க வேண்டாம் எனச் சவுக்கு சங்கரின் தாயார் கமலா தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். பார்வையாளர்கள் சந்திப்பை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் சிறை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்ற கிளை வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதோடு, சங்கருக்கான ஜாமீன் நிபந்தனைகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளர் விதிக்க உத்தரவிட்டது.

அதன்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளர் வெங்கடாவரதன் ஜாமீன் நிபந்தனைகளை பிறப்பித்துள்ளார். அதில், சவுக்கு சங்கர் தினமும் காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக வலைதளங்களில் எந்த கருத்துக்களையும் பதிவிடகூடாது. நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சங்கர் ஆஜராக வேண்டும். நீதித்துறை குறித்து எந்த கருத்துக்களையும் சங்கர் தெரிவிக்கக் கூடாது. 20,000 ரூபாய் மதிப்புள்ள இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, 62 நாள் சிறை வாசத்துக்கு பிறகு சவுக்கு சங்கர் இன்று மதியம் கடலூர் சிறையில் இருந்து வெளியே வந்தார். தினமும் காலை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் மதுரையில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in