‘40 ராணுவ வீரர்கள் பலியானதன் பின்னணியில் அலட்சியம்; அம்பானி நலனுக்காக ரூ.300 கோடி லஞ்சம்’

-அதிரடி கிளப்பும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர்!
மாலிக் - மோடி
மாலிக் - மோடி

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநரான சத்யபால் மாலிக், எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்குமா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

2019இல் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். சிஆர்பிஎஃப் தரப்பின் விமான உதவியை உள்துறை அமைச்சகம் நிராகரித்ததே இந்த துயரத்துக்கு காரணம் என்று, இன்று வரை குற்றச்சாட்டு நீடித்து வருகிறது. புல்வாமா தக்குதல் சம்பவத்தின்போது ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், தற்போது மீண்டும் இந்தக் கூற்றச்சாட்டினை எழுப்பியுள்ளார்.

மேலும் உளவுத்துறை தகவல்கள் புறக்கணிக்கப்பட்டது மற்றும் மெத்தனமாக கையாளப்பட்டது தொடர்பாக தான் எழுப்பிய கேள்விகளுக்கு, தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர், தன்னை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

சத்ய மாலிக் பாலின் இந்த குற்றச்சாட்டுகள், பாஜகவை தற்போது சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன. இது தவிர முன்னாள் பாஜக பொதுச்செயலர்களில் ஒருவரும் தற்போதைய ஆர்எஸ்எஸ் நிர்வாகியுமான ராம் மாதவ், அம்பானி தொடர்பான கோப்பு ஒன்றுக்காக தனக்கு ரூ300 கோடி லஞ்சம் தர முன்வந்ததாகவும் சத்யபால் மாலிக் போட்டுடைத்திருக்கிறார். ராம் மாதவ் இதனை திட்டவட்டமாக மறுத்ததோடு, நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்போவதாக எச்சரித்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர் கரண் தப்பாரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலான, சத்யபால் மாலிக்கின் தற்போதைய அதிரடி பேட்டியை காங்கிரஸார் கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளனர். ராகுல் காந்தி முதல் செய்தி தொடர்பாளர் பவன்கேரா வரை பல்வேறு நிர்வாகிகள் வரை இவை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ”அம்பானிக்காக பாஜக தலைவர் ஒருவர், அப்போதைய ஆளுநருக்கு ரூ.300 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பொதுவெளியில் பதிவான பிறகும், சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை இன்னும் ஏன் நடவடிக்கையில் இறங்கவில்லை?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாஜகவை உலுப்பும் கேள்விகளை எழுப்பிய சத்யபால் மாலிக் பாதுகாப்பு குறித்தும் காங்கிரஸார் கவலை தெரிவித்துள்ளனர். உடனடியாக சத்யபால் மாலிக்கிற்கு பாதுகாப்பினை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in