சத்யபால் மாலிக்
சத்யபால் மாலிக்

சத்யபால் மாலிக்கிடம் சிபிஐ 5 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை

ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது, தனக்கு ரூ300 கோடி லஞ்சம் வழங்க முன்வந்ததாக சத்யபால் மாலிக் தெரிவித்தது தொடர்பாக, அவரிடம் சிபிஐ இன்று நீண்ட விசாரணையை மேற்கொண்டது.

ஆகஸ்ட் 2018 - அக்டோபர் 2019 இடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கடைசி கவர்னராக சத்யபால் மாலிக் இருந்தார்.அப்போது அவர் எதிர்கொண்ட சில விவகாரங்கள் தொடர்பாக, அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் முதலாவது, புல்வாமா தாக்குதல் தொடர்பானது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சங்கடத்துக்கு ஆளாக்கும் சில தகவல்களை அதில் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக அமித் ஷா - சத்யபால் மாலிக் இடையே வார்த்தைப் போர் நீடித்து வருகிறது.

இரண்டாவது விவகாரமாக, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரமுகரான ராம் மாதவ் என்பவர், 2 நிறுவனங்களுக்கான ஒப்பந்தங்களை முடித்துத்தர ரூ300 கோடி லஞ்சமாக தனக்கு தர முன்வந்ததாகவும் சத்யபால் மாலிக் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரிதாய் வெடித்ததில், சத்யபால் மாலிக் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக ராம் மாதவ் அறிவித்திருந்தார்.

ரூ.300 கோடி லஞ்சம் அளிக்க முன்வந்தது தொடர்பாக விசாரிக்க சிபிஐ முன்வந்தது. அதன்படியான விசாரணையில் பங்கேற்ற சத்யபால் மாலிக், சிபிஐ அதிகாரிகளின் 5 மணி நேரத்துக்கு நீடித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

சத்யபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்தபோது, அவருக்கு எதிரான ஊழல் புகார்கள் என்ற பெயரில் கடந்தாண்டு ஏப்ரலில், 2 வழக்குகளை பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in