4 மாதத்தில் சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கை முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கெடு

4 மாதத்தில் சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கை முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கெடு

சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கை 4 மாதத்தில் முடிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கெடு விதித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் கரோனா காலத்தில் கடையை திறந்துவைத்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது, அவர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்கினர். இதையடுத்து, கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி செல்வராணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கரோனா, ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க முடியவில்லை என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதோடு, மேலும் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, மேலும் 5 மாத காலம் அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட நீதிமன்றம் சார்பில், இந்த வழக்கில் மொத்தம் 150 சாட்சிகளில் 55 முதல் 65 சாட்சிகளே முக்கியமானவராக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் குற்றவாளிகளாக கருதப்படும் 9 பேரின் வழக்கறிஞர்களும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதால் காலதாமதம் ஏற்படுகிறது என்றும் மேலும் 4 மாதம் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, 4 மாதம் காலம் இறுதி அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in