கொங்கு மண்டலம் முதல் கோட்டை வரை கோலோச்சிய கோவை ராவணன் மறைந்தார்

ராவணன்
ராவணன்

கொங்கு மண்டல அதிமுக முக்கிய நிர்வாகியாக இருந்தவரும்,  சசிகலா, ஜெயலலிதா ஆகியோருக்கு ஆலோசனைகளைக் கூறியவராகக் கருதப்பட்ட கோவை ராவணன் இன்று மாலை காலமானார்.

சசிகலாவின் சித்தப்பா டாக்டர் கருணாகரனின் மருமகன் தான் இந்த  ராவணன். கோவையில் தொழில் நிறுவனம் நடத்தி வந்த ராவணன், அதிமுகவில் சசிகலா முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலைக்கு வந்தபோது அவருக்கு ஆலோசனைகளைச் சொல்ல ஆரம்பித்தார். தம்பி திவாகரனின் ஆலோசனைகளை கேட்டு நடந்து வந்த சசிகலா ஒரு கட்டத்தில் அனைத்திற்குமே ராவணனைக் கேட்டு நடக்க ஆரம்பித்தார்.

2003-04-ம் ஆண்டுகளில் கொங்கு மண்டல அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களுக்கான ரகசிய நேர்காணல் என அனைத்தையும் நடத்தியவர் ராவணன் தான். கொங்கு மண்டல அதிமுகவை மட்டுமல்லாமல்  கோடநாடு எஸ்டேட்டையும், மிடாஸ் மதுபான தொழிற்சாலையையும்  இவரே நிர்வகித்து வந்தார்.

அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்த ராவணன் ஜெயலலிதாவின் வெறுப்பையும் ஒரு கட்டத்தில் சம்பாதித்தார். ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் ஒருவரை கடத்திச் சென்று அடைத்துவைத்து  மிரட்டி, அவரது நிலங்களை அபகரித்துக் கொண்டதாக  ராவணனின் மீது புகார் பதிவானது. அதில்  ராவணன் தலைமறைவானார்.  ஆனால் என்னவோ செய்து   2011 சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக வேட்பாளர் தேர்வில் இவர் வைத்ததே சட்டம் என்றானது.   

பெங்களூரு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றால் யாரை முதல்வர் ஆக்குவது என்ற கேள்வி எழுந்தபோது ராவணனை ஆக்கலாம் என்று சசிகலா குடும்பம் முடிவு செய்திருந்தது. அதன் பிறகு சசிகலா குடும்பத்தினர் மீது பல்வேறு புகார்கள் வந்து பலரும் போலீஸில் சிக்க, அதில் ராவணனும் கைதானார். சசிகலா கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் மன்னிப்பு கேட்டதால்  சசிகலா கார்டனில் திரும்ப அழைக்கப்பட்டு, இவர்கள் மீதான நெருக்கடிகள் தளர்த்தப்பட்டன. ராவணனும் விடுதலையானார். 

அதன் பிறகு பல்வேறு இடங்களில், பல்வேறு முறைகளில் சசிகலாவின்  உறவுகள் அதிமுவுக்குள் நுழைந்தாலும் ராவணன் மட்டும்  எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தார். அதற்கு காரணம் அவரிடமிருந்த சொத்துக்கள் முழுவதையும் ஜெயலலிதா எழுதி வாங்கிக் கொண்டார், இனி அதிமுக விவகாரங்களில் தலையிடக்கூடாது  என்று எச்சரித்தார் என்றும் சொல்லப்பட்டது. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ராதாநரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.பிச்சைக்கண்ணு வாண்டையார்  மகனான  ராவணனுக்கு ஒரே மகன் அரவிந்த்.  இவர் திருச்சியில்  மருத்துவ உயர்கல்வி பயின்று வருகிறார். அவருடன் தங்கி இருந்த நிலையில் திடீரென இன்று  மாலை மாரடைப்பு ஏற்பட்டு ராவணன் உயிரிழந்தார். அவருடைய இறுதி சடங்குகள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  அவர் சொந்த  கிராமத்தில் நாளை நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in