காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேவை: சசி தரூர் கோரிக்கை

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேவை: சசி தரூர் கோரிக்கை
சசி தரூர்

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேவை என்று குரல் எழுப்பியிருக்கிறார், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர்.

டெல்லியில் நேற்று (செப்.18) செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “கடந்த இரண்டு ஆண்டுகளாக காங்கிரஸுக்கு நிரந்தரத் தலைவர் இல்லை. பலரும் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேவை எனக் கோரியிருக்கிறார்கள். நிறுவன ரீதியாகக் கட்சிக்குள் இன்னும் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.

“சோனியா காந்திக்கு எதிராக யாரும் பேச மாட்டார்கள். அவர்தான் ஒரு தலைவராக எங்களை வழிநடத்தியிருக்கிறார். எனினும், கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலக விரும்புவதாக அவர் பல ஆண்டுகளாகக் கூறிவருகிறார்” என்று தெரிவித்திருக்கும் சசி தரூர், கட்சித் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி முன்வந்தால், அது விரைவில் நடந்தேற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைத்த படுதோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் வேண்டும்; உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி குலாம் நபி, கபில் சிபல், ராஜ் பப்பர், மனீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, பூபேந்தர் சிங் ஹூடா உள்ளிட்ட தலைவர்கள் கடந்த ஆண்டு கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in