சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் சொத்துகள் திடீர் முடக்கம்: காரணம் இதுதான்?

சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் சொத்துகள் திடீர் முடக்கம்: காரணம் இதுதான்?

சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் 234.75 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை திடீரென முடக்கியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு கமர்சியல் ஷோரூம் கட்டுவதாக கூறி இந்தியன் வங்கியில் இருந்து சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனம் முதலில் 150 கோடி ரூபாயும், பின்னர் 90 கோடி ரூபாயும் கடனாக பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டும் 90 கோடி ரூபாயை கடனாக பெற்ற சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனம், கடன் பெற சொன்ன காரணங்களுக்கு பயன்படுத்தாமல் கடனையும் அடைக்காமல் அந்த பணத்தை வேறு விவகாரங்களில் முதலீடு செய்துள்ளதாக இந்தியன் வங்கி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாகி கே.எஸ்.குப்தா சி.பி.ஐ-யிடம் புகார் அளித்திருந்தார். குறிப்பாக தி.நகரில் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவன் ஆகியோர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இந்த முறைகேட்டால் தங்களுக்கு 312 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியன் வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புகாரின் அடிப்படையில் சரவணா கோல்டு பேலஸ் நிறுவனத்தார், பங்குதாரர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத சில அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே இந்த விவகாரத்தில் கடந்த ஜனவரி மாதம் தி.நகரில் உள்ள சரவணா கோல்டு பேலஸ் நிறுவனத்தை எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்தியன் வங்கி ஜப்தி செய்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் 234.75 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in