‘என்னைக் கைது செய்யுங்கள்’ - அமலாக்கத் துறையின் வளையத்தில் சஞ்சய் ராவத்!

‘என்னைக் கைது செய்யுங்கள்’ - அமலாக்கத் துறையின் வளையத்தில் சஞ்சய் ராவத்!

சிவசேனா கட்சி மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத், முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மிக முக்கியமான ஆதரவாளர். அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான ‘சாம்னா’வின் இணை ஆசிரியர். பாஜக உட்பட பல கட்சிகள் குறித்து பரபரப்பான தலையங்கம், கட்டுரை வெளியாவதன் பின்னணியில் இருப்பவர் எனக் கருதப்படுபவர்.

கடந்த சில நாட்களாக சிவசேனா கட்சிக்குள் வெடித்திருக்கும் அரசியல் குழப்பங்கள் தொடர்பாகத் தொடர்ந்து அதிரடியாகப் பேசிவரும் சஞ்சய் ராவத், தற்போது அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 1,034 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்டிருக்கும் பத்ரா சால் நிலமோசடி வழக்கில் நாளை நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது அமலாக்கத் துறை. ஏப்ரல் மாதம் இந்த வழக்கு தொடர்பாக அவரது சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது.

இந்துத்வா கொள்கையின் அடிப்படையில் பாஜக கூட்டணியில்தான் சிவசேனா தொடர வேண்டும் என்று வலியுறுத்தி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏ-க்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பாஜகவுக்கு ஆதரவாக சிவசேனா கட்சி எம்எல்ஏ-க்களும், எம்.பி-க்களும் செயல்படுவதன் பின்னணியில் அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் அழுத்தம் இருப்பதாக உத்தவ் தாக்கரேயின் ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார்கள்.

இந்நிலையில், தனக்கு அனுப்பப்பட்டிருக்கும் சம்மன் குறித்துப் பேசியிருக்கும் சஞ்சய் ராவத், “இதற்கெல்லாம் பயப்படும் ஆள் அல்ல நான். என்னைக் கைதுசெய்யுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

“எங்களுக்கும் அமலாக்கத் துறையிடமிருந்து இதுபோன்ற அழுத்தம் வந்தது. ஆனால், நாங்கள் உத்தவ் தாக்கரேவுக்குத் துணை நிற்கிறோம்” கடந்த வியாழன் அன்று சஞ்சய் ராவத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in