சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுரம் குடமுழுக்கு: பக்திப்பெருக்கோடு திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

சமயபுரம் மாரியம்மன் கோயில்
சமயபுரம் மாரியம்மன் கோயில்

திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கிழக்கு வாசலில் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 நிலைகளுடன் கூடிய 108 அடி உயர ராஜகோபுரம் குடமுழுக்கு இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், பக்தர்கள் வேண்டும் வரமளிப்பவராகவும் விளங்குகிறாள். அவளின் அருள் வேண்டி ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் அன்றாடம் ஆலயத்துக்கு வந்து செல்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திக்கடன் செய்தும் வழிபட்டு வருகின்றனர்.

இக்கோயிலில் 2015-ம் ஆண்டில் குடமுழுக்கு பணிகள் தொடங்கின. அப்போது, மேற்கு, தெற்கு, வடக்கு வாசல்களில் இருந்த கலசக் கோபுரங்கள் அகற்றப்பட்டு, புதிதாக 5 நிலைகளுடன் கூடிய கோபுரங்கள் கட்டப்பட்டன. கருவறை விமானத்துக்கும் புதிய கோபுரங்களுக்கும் கடந்த 2017, பிப்.6-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது.

இந்தநிலையில், கோயிலின் கிழக்கு வாசலில் 60 அடி நீளம், 43 அடி அகலம், 108 உயரத்தில் புதிதாக ராஜகோபுரம் கட்டத் திட்டமிடப்பட்டது. இதற்கு ரூ.2.25 கோடி கோயில் நிதியிலிருந்தும், மீதமுள்ள நிதியை உபயதாரர்களிடமிருந்தும் பெற்று 7 நிலைகளுடன் 108 அடி உயரத்துக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த ராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு செய்வதற்கு திட்டமிடப்பட்டு கடந்த 3 ம் தேதி இரவு பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, ஆகியன நடைபெற்று, நான்கு கால ஹோம பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள 7 விமான கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவில் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடமுழுக்கு விழாவில் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் அன்பழகன் ,மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in