
தினந்தோறும் மக்களை தவறாமல் சந்திக்கும் ஒரு பேரூராட்சி தலைவர், மக்களை சந்திக்க சைக்கிளை பயன்படுத்துகிறார் என்பது அப்பகுதி மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவில் உள்ளது சாமளாபுரம் பேரூராட்சி. இப்பகுதியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சாமளாபுரம் பேரூராட்சியின் தலைவராக விநாயகா பழனிச்சாமி உள்ளார். சாதாரண வார்டு கவுன்சிலர்கள் கூட சொகுசு காரை பயன்படுத்தும் இந்த கால அரசியலில் இவர் மக்களை சந்திக்கவும், அலுவலகம் செல்லவும் இன்னமும் சைக்கிளையே பயன்படுத்தி வருகிறார்.
இவர் பதவியேற்ற நாள் முதலே நாள்தோறும் காலை சுமார் 6 மணி அளவில் வீட்டில் இருந்து சைக்கிளில் கிளம்பி சாமளாபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து விடுகிறார். பின்னர் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தண்ணீர் இயக்கும் பணியாளர்களை சந்தித்து ரோல்கால் நடத்துகிறார். அவரவருக்கு ஒதுக்கப்படும் பணிகள் குறித்து சரிபார்த்து அவர்களை உரிய நேரத்தில் அனுப்பி வைக்கிறார். இது ஒரு நாள் கூட தவறுவதில்லை.
பின்னர் தனது சைக்கிளில் பயணத்தை துவக்கும் அவர் ஒவ்வொரு வார்டாக, அங்குள்ள வீடுகளுக்குச் சென்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் அதற்குண்டான தீர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இப்படி அவர் தினமும் பயணிக்கும் மொத்த தூரம் 18 கிலோமீட்டர். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் நீண்டநாள் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதிலும் இவர் முனைப்பு காட்டி வருகிறார்.
தங்கள் பேரூராட்சியின் தலைவர் சைக்கிளில் சென்று வீடு வீடாக பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து வருவது அந்த பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவரைப்போல மேலும் பலரும் இந்த வழியை பின்பற்றினால் மக்கள் பணி சிறக்கும் என்பதில் ஐயமில்லை.