சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவிகள்: சர்ச்சையில் சிக்கும் பள்ளி

சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவிகள்: சர்ச்சையில் சிக்கும் பள்ளி

குடும்பப் பிரச்சினை காரணமாக மாணவிகள் இருவர், பள்ளி வளாகத்திலேயே சாணி பவுடரைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் மனம் உடைந்து நிலையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது பிரச்சினைகளை வகுப்புத் தோழியிடம் தெரிவித்துள்ளார். தோழியும் தனது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை எழுந்து வருவதாக அவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர். சாணி பவுடருடன் பள்ளிக்குச் சென்று மாணவிகள் நேற்று அதைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக வாழப்பாடி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் பள்ளிக் கல்வித் துறையினர் அந்தப் பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் இதே பள்ளி மாணவிகள் நான்கு பேர் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவிகளின் தற்கொலைக்குக் குடும்ப பிரச்சினைதான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in