தரிசனத்திற்காக 17 வருடம் காத்திருந்த பக்தர்; திருப்பதி தேவஸ்தானத்திற்கு 45 லட்சம் அபராதம்: சேலம் நீதிமன்றம் அதிரடி!

தரிசனத்திற்காக 17 வருடம் காத்திருந்த பக்தர்; திருப்பதி தேவஸ்தானத்திற்கு 45 லட்சம் அபராதம்: சேலம் நீதிமன்றம் அதிரடி!

தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் அனுமதிக்காமல் 17 ஆண்டுகளாகப் பக்தர்களை அலைக்கழித்த திருப்பதி தேவஸ்தானத்திற்கு 45 லட்ச ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் விதித்துள்ளது.

சேலம் மாவட்டம், அழகாபுரத்தில் வசித்து வருபவர் ஹரிபாஸ்கர். இவர் கடந்த 27.06.2006–ம் தேதி திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாத்து வஸ்திர சேவை என்ற தரிசனத்திற்காக இரு நபர்களுக்கு 12,250 ரூபாய் பணம் செலுத்திப் பதிவு செய்துள்ளார். ஆனால் அந்த நபருக்குத் தரிசனத்திற்கு 10.07.2020 என்ற தேதி ஒதுக்கப்பட்டு அந்த தேதி ரசீதிலும் குறித்துக் கொடுக்கப்பட்டது.

திருப்பதி தேவஸ்தானம் ஒதுக்கிய காலகட்டத்தில் கரோனா காரணமாகத் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் மேல் சாத்து வஸ்திர வேசை என்ற தரிசனம் செய்ய வேறு தேதி அறிவிக்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த வாய்ப்பு இல்லை என்றும், பிறகு தேதி ஒதுக்கப்படும் என்றும் தேவஸ்தானம் மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்டிருந்தது. 17 வருடம் காத்திருந்தும் தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்காதது தேவஸ்தானத்தின் சேவை குறைபாடு எனக் கூறி சேலம் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் ஹரிபாஸ்கர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த 18.08.2022 அன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் ஒரு வருட காலத்தில் மனுதாரருக்கு மேல் சாத்து வஸ்திர சேவை என்ற தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சேவை குறைபாடு ஏற்படுத்திய காரணத்திற்காக 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் தரிசனத்திற்காகக் கட்டிய ரூ.12,250 தொகையையும் உத்தரவு பிறப்பித்த இரண்டு மாத காலத்தில் திருப்பி கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 6 சதவீத வட்டியுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும் எனச் சேலம் நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in