`சேல் இன் இந்தியா திட்டமே செயல்பாட்டில் உள்ளது'

மக்களவையில் ராமநாதபுரம் எம்பி குற்றச்சாட்டு
`சேல் இன் இந்தியா திட்டமே செயல்பாட்டில் உள்ளது'

"இன்று நாட்டில் ’மேக் இன் இந்தியா’ திட்டம் இல்லை. ’சேல் இன் இந்தியா’ திட்டமே செயல்பாட்டில் உள்ளது. நீங்கள் உருவாக்கவில்லை மாறாக முந்திய ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்ததை விற்றுக் கொண்டிருக்கிறீர்கள்" என்று மக்களவையில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி குற்றம்சாட்டினார்.

மக்களவையில் இன்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை மானியம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, ராமநாதபுரம் தொகுதி எம்பியுமான கே.நவாஸ்கனி பேசுகையில், "நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் மிக முக்கியமான துறையான தொழில்துறையில் நம் நாட்டின் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். உலக மக்கள்தொகையில் இரண்டாவது இடத்திலிருக்கும் நாம், அதிகப்படியான மக்கள் சக்தியை கொண்ட நாம், இன்னும் பல்வேறு பொருட்களுக்கு பல நாடுகளைச் சார்ந்து தான் இருக்கிறோம்.

மேக் இன் இந்தியா என்று இந்த அரசு பெருமையாக அறிவித்து, ஆரவாரத்துடன் பிரச்சாரம் செய்தது. ஆனால் நீங்கள் அறிவித்த அறிவிப்பிற்கு, நீங்கள் கொடுத்த ஆரவாரத்திற்கு செயல்வடிவம் கொடுத்தீர்களா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் தீவிரமாக இருக்கின்றதா? எத்தனை திட்டமிடல்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டன என்பதை விளக்க தயாராக இருக்கிறதா? மேக் இன் இந்தியா திட்டத்தில் நாம் எந்த துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க இந்த அரசு தயாராக இருக்கிறதா? எத்தனை உள்நாட்டு தொழில் முனைவோர்கள் பயன் அடைந்துள்ளார்கள்? எவ்வளவு பணம் அதற்கு ஒதுக்கப்பட்டது? அதன் மூலம் யார் யார் பயனடைந்தார்கள்? தெளிவாக விளக்க அரசு தயாராக இருக்கிறதா?? உள்ளபடியே, இன்று நாட்டில் ’மேக் இன் இந்தியா’ திட்டம் இல்லை.

இதனால் முதலீட்டை ஈர்ப்பதில், பல்வேறு சிரமங்கள் உள்ளது. தற்போது சிறு நாடுகள் கூட பெரிய முதலீடுகளை ஈர்த்துக் கொண்டிருப்பதை எல்லாம் நாம் அறிவோம். எனவே, அன்னிய முதலீட்டை அதிகரிப்பதில் அரசு தெளிவான கண்ணோட்டத்தோடு செயல்பட வேண்டும். முதலீட்டை ஈர்க்கும் வகையில் நம்முடைய கொள்கைகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்க அரசு மிகுந்த கவனத்துடன் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்க போதுமான தர சோதனைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். என்னுடைய தொகுதியான ராமநாதபுரம் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. நீராதாரங்களோ, தொழில் வாய்ப்புகளோ இல்லாத வறட்சியான பகுதியாக இருக்கிறது. இங்கு தொழில் வாய்ப்புகளை பெருக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 40,000 ஏக்கர் பாரம்பரிய சாகுபடியான குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. எங்கள் மாவட்டத்தின் தனி அடையாளமாக இந்த குண்டு மிளகாய் சாகுபடி திகழ்ந்து வருகிறது. ராமநாதபுரம் மிளகாய்களுக்கு உலக அளவில் தரச்சான்று வழங்க வேண்டும் என்று எங்கள் பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றார்கள். இதை அவையில் பரமக்குடி மிளகாய்க்கு உலகத் தர நிர்ணய முத்திரை பெறுவதற்காக அரசு முயற்சிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தேன். வர்த்தகத் துறை அமைச்சர் என்னுடைய கோரிக்கையை பரிசீலிப்பதாக அவையில் அறிவித்தார். மிளகாய்தூள் உற்பத்தியாளர்களுக்கு இடையே எங்களுடைய மிளகாய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு ஜி.ஐ ரெஜிஸ்ட்ரி என்ற சிறப்பு முத்திரையும், உலகத்தர நிர்ணய சான்றும் வழங்க முன்வர வேண்டும். ராமநாதபுரம் மிளகாய் பெரும்பான்மையாக ஏற்றுமதியும் செய்யப்படுவதால் ஸ்பைசஸ் போர்டு மூலமாக மிளகாய் சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி செய்தல் குறித்த பயிற்சி முகாம்கள் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிக அளவில் மிளகாய் உற்பத்தி செய்யப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்பைசஸ் போர்டு மண்டல அலுவலகத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, மத்திய அரசு சிப்காட் மூலம் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கனரக தொழிற்சாலைகள் அமைக்க சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிகமாக தென்னை விவசாயிகள் இருக்கிறார்கள். தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. எனவே, தேங்காய் உதிரிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அங்கு ஏற்படுத்தி தரவேண்டும். மூலப் பொருட்கள் அதிகமாக கிடைக்கிறது. வருவாய் ஈட்டக்கூடிய தொழிலாகவும் இருக்கிறது. அந்தப் பகுதியில் வேலை வாய்ப்பு பெருகும் வாய்ப்பாகவும் அமைகிறது.

அறந்தாங்கியில் நிலக்கடலை மற்றும் நெல் சாகுபடியும் அதிகமாக இருக்கிறது. அங்கு நவீன ஆலையை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். என்னுடைய தொகுதிக்குட்பட்ட விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதி. அங்கு பருத்தி சாகுபடி அதிகமாக இருக்கிறது. பருத்தி சார்ந்த பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்யும் வண்ணம் நவீன தொழிற்சாலையை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிகப்படியான கடலோரப் பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு மீன் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. வெளிநாடுகளில் எங்களுடைய பகுதி மீன்களுக்கு அதிக கிராக்கி இருக்கிறது. இருப்பினும் போதிய வசதிகள் இல்லாததால் பெருமளவில் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையிலேயே இருக்கிறது. எனவே, என்னுடைய தொகுதியில் நவீன மீன் ஏற்றுமதி மையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in