வேலைநிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேலைநிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேலைநிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்காத போது, வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வேலைநிறுத்தம் செய்யும் நாட்களில் தங்களின் பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் 28 மற்றும் 29-ம்தேதிகளில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்ககோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் அமர்வு விசாரித்து வந்தது.

ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது, சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வது சட்ட விரோதமானது. அரசு ஊழியர்கள் அவர்களின் நடத்தை விதிகள், அரசாங்க சுற்றிக்கைகள் மற்றும் பொதுமக்களைப் பாதிக்கும் அறிவிப்புகளை மீறி வேலைநிறுத்தம் செய்ய சட்ட ரீதியாக உரிமை இல்லை. இதனை மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு, அரசு சம்பளம் வழங்கியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது அவர்களை ஊக்குவிப்பது போல அமையும். எனவே, இனி இதுபோன்ற விவகாரங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in