தொகுதிக்கு வந்து செல்ல ரூ.70,000 சம்பளம் ரூ.2,50,000/- எம்பி-க்களுக்கான சலுகைகள் என்னென்ன தெரியுமா?

மக்களவையில் எம்பி-க்கள்
மக்களவையில் எம்பி-க்கள்

மக்களவை தேர்தலில் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரை அறிந்துகொள்வதன் அங்கமாக, தேர்வாகும் எம்பிக்கான ஊதியம், சலுகை, இதரப்படிகள் ஆகியவற்றையும் வாக்காளர்கள் அறிந்து கொள்வது நியாயமாகிறது.

வாக்காளர்கள் தங்கள் தொகுதியின் தேவைகள், பிரச்சினைகள், நலத்திட்டங்கள் உள்ளிட்டவைக்காக, தங்களின் பிரதிநிதியாக ஒருவரை தேர்ந்தெடுத்து மாநிலங்களின் சட்டமன்றமோ, தேசத்தின் நாடாளுமன்றத்துக்கோ அனுப்பி வைக்கின்றனர். மக்களுக்காக சேவை செய்யும் நோக்கில் மக்கள் பிரதிநிதிகள் கடமையாற்றினாலும், அதற்காக மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஊதியம் முதல் சலுகைகள் வரை ஏராளமான ஆதாயங்களை அவர்கள் பெறுகிறார்கள். வாயடைக்கச் செய்யும் அந்த ஆதாயங்களை, மக்களவை உறுப்பினரைப் பொறுத்து என்னென்ன என்று இங்கே பார்ப்போம்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

2018 பட்ஜெட் முதல் எம்பிக்களின் சம்பளம் உள்ளிட்டவை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டன. அதுவரை ரூ50,000 அடிப்படை ஊதியமாக பெற்றுவந்த எம்பிக்கள் அதன் பிறகு ரூ1,00,000 ஊதியமாக பெற ஆரம்பித்தனர். அடுத்தபடியாக தொகுதிக்கு சென்று வருவது உள்ளிட்டவைக்கான சலுகைப்படியாக மாதம் ரூபாய் 70,000 வழங்கப்படுகிறது. மேலும் அலுவலக செலவினத்துக்கான சலுகைப்படியாக மாதத்திற்கு ரூ60,0000 வழங்கப்படுகிறது. இவற்றை உள்ளடக்கி மாதாந்திர சம்பளமாக மட்டுமே சுமார் இரண்டரை லட்சம் ரூபாயை மக்களவை எம்பிக்கள் பெறுகின்றனர். இவற்றை 5 வருடங்களுக்கு ஒருமுறை பரிசீலித்து உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவளம் தவிரவும் பயணம், உணவு, எழுதுபொருள், வீடு அல்லது அலுவலகத்துக்கான தளவாடங்கள், மின்சாரம், குடிநீர், மருத்துவம், எம்பி மட்டுமன்றி அவரது குடும்பத்தார் மற்றும் உதவியாளருக்கான சலுகைகள் என மக்கள் சேவகர்களுக்கு மேலும் வசதிகள் கிடைக்கும்.

மக்களவை கூட்டங்களுக்காக தலைநகர் வருகை தரும் எம்பிக்களுக்கு ஜூனியர், சீனியர் என அனுபவத்துக்கு ஏற்ப, தங்குமிட வசதிகள் உண்டு. அவற்றுக்கான வாடகை இலவசம். அதற்கான தளவாடப் பொருட்கள் வாங்கிப்போட வருடத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அனுமதிக்கப்படுகிறது. 2 லேண்ட்லைன் ஒரு மொபைல் என மூன்று இலவச தொலைபேசி இணைப்புகள் உண்டு. அத்துடன் கட்டற்ற இணைய சேவையும் இலவசம். 4000 கிலோ லிட்டர் தண்ணீர் மற்றும் 50,000 யூனிட் மின்சாரம் இலவசம். கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர் என மின்னணு பொருட்கள் வாங்கிக் கொள்வதற்கு வருடத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பெறலாம்.

தேர்தல்
தேர்தல்

பயணங்களை மேற்கொள்வதில் சாலை மார்க்கம் எனில் கிமீ-க்கு ரூ16வீதம் என்பதில் தொடங்கி, பயண செலவினத்தை பின்னர் ஈடு செய்துகொள்ளலாம். விமான பயணம் எனில் நான்கில் ஒரு பங்கு கட்டணம் செலுத்தினால் போதும். ரயிலில் ஏசி ஸ்லீப்பர் அல்லது பிசினஸ் வசதி இலவசம். எம்பி உடன் பயணிக்கும் மனைவி அல்லது உதவியாளருக்கும் சலுகை உண்டு. வருடத்திற்கு 34 முறை இந்த பயண சலுகை பாஸ் கிடைக்கும். அவசியமெனில் அது அடுத்த வருட சலுகையில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். நடப்பு வருடத்தின் மிச்ச சலுகையை அடுத்த வருடத்துக்கு ஏற்றிக் கொள்ளலாம்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாட்களில் வருகை புரிவோருக்கு தினப்படியாக ரூ.2000 உண்டு. நாடாளுமன்ற உணவகத்தில் பெயரளவுக்கு மட்டுமே விலை இருக்கும். உதாரணத்துக்கு மட்டன் பிரியாணி விலை ரூ.30. இது தவிர மருத்துவபடிகள், இலவச அல்லது சலுகையின் கீழான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதிகள் உண்டு. மக்களவை உறுப்பினராக பணியாற்றி ஒய்வு பெற்றவருக்கும், அவர் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் ஓய்வூதியம் தீர்மானிக்கப்படும்.

கிட்டத்தட்ட சகலத்திலும் இலவசம் அல்லது சலுகை வசதிகளை 5 ஆண்டு காலத்துக்கு எம்பிக்கள் அனுபவித்துக்கொள்ளலாம். மேலதிக நியாயமான செலவினங்கள் எழுந்தாலும் அவற்றை குறிப்பிட்டு க்ளெய்ம் செய்து கொள்ளவும் முடியும். இவை அனைத்துமே மக்கள் தொண்டாற்றவும், மக்களுக்காக கேள்வி கேட்கவும், நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கவும் அவருக்கு வழங்கப்படும் மக்கள் வரிப்பணம். எனவே நியாயமாக வாக்களித்து சரியான மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்வதும், அவர்களிடம் தங்கள் தொகுதிக்கு உரியதை கோரிப்பெறுவதும் வாக்காளர்களின் உரிமையாகிறது.

இதையும் வாசிக்கலாமே...  

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in