எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது

எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது

மத்திய அரசின் சார்பாக வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் படைப்புக்காக 2022-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு மு.ராஜேந்திரன், இ.ஆ.ப. எழுதியுள்ள 'காலா பாணி' நாவல் தேர்வாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மு.ராஜேந்திரன் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும் தமிழக வரலாற்றின்மீதும் பற்றுமிக்கவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளில் சட்டக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இந்திய ஆட்சிப்பணியில் பொறுப்பேற்று தமிழகத்தின் பலவிதமான துறைகளில் பணியாற்றியானார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தபோது அப்பகுதியில் இயற்கை வளம் சார்ந்த மலைப் பகுதிகளை கனிம வளக் கொள்ளையர்களிடம் பறிபோவதைத் தடுத்துநிறுத்திய பெருமை இவருக்கு உண்டு. மேலும், ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு கரடுமுரடான பாதைகளை செப்பனிட்டு சாலைகள் அமைத்துக் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே காலக்கட்டங்களில் தனது தணியாத ஆர்வமான வரலாற்றின்மீது தணியாத ஆர்வம் கொண்டு நேரில் களப்பணிகளில் ஈடுபட்டார். தமிழக வரலாற்றுகால செப்பேடுகளை ஆய்வு செய்தல், ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளின் பிரதிகளை தேடியெடுத்து தொகுத்தல் போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நேரடியாக களப்பணியாற்றி தொகுத்த வரலாற்றின் உண்மைத் தகவல்களை ஆவண புத்தகங்களாகவும் வெளியிட்டார். அதனையொட்டி எழுந்த விடுபட்ட வரலாற்று சொல்லாடல்களை தனது புனைவில் புகுத்தி நாவல்களாகவும் எழுதி வந்தார். 1801, வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு, 'காலா பாணி' போன்ற நாவல்கள் அவரது ஆராய்ச்சியில் கிடைத்த நல்முத்துக்கள் எனலாம். இவரது படைப்புகளுக்காக தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு அறக்கட்டளைகள் இவருக்கு விருதுகள் பல வழங்கி கவுரவித்துள்ளன.

சாகித்ய அகாடமி விருது பெறும் ‘காலா பாணி’ நாவல், இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இந்திய சுதந்திர போராட்ட வரலாறு சிப்பாய் கலகத்துடன் தொடங்கவில்லை. அதற்கு முன்னரே தமிழகத்தில் தொடங்கப்பட்டுவிட்டது. எனவே, ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த இந்திய விடுதலை வரலாற்றை தமிழகத்தில் விடுபட்ட தியாகச் சுடர்களை பேசியபிறகே அதற்கு பின்வந்த மற்ற விடுதலை வீரர்களைப் பேசவேண்டும் என்பதுதான் 'காலாபாணி' நாவல் முன்வைக்கும் வாதமாகும். எனவே, இந்நாவலின் செய்தி, தேசிய அளவில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாக மிளிர வேண்டியதும், அதற்கு விருது கிடைத்திருப்பதும் மிகவும் பொருத்தமானதுதான். இந்நாவல் அகநி பதிப்பக வெளியீடாக கிடைக்கிறது. தமிழக அரசு மு.ராஜேந்திரன் தனது அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் பதவி வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in