மீண்டும் வெடிக்கும் பைலட் - கெலாட் யுத்தம்: காங்கிரஸுக்குப் புதிய தலைவலி!

அசோக் கெலாட்டுடன் சச்சின் பைலட்
அசோக் கெலாட்டுடன் சச்சின் பைலட்

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சச்சின் பைலட், மீண்டும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவருகிறார். அம்மாநிலத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், முதல்வர் அசோக் கெலாட்டுடனான தனது பழைய பகையை மீண்டும் தூசுதட்டத் தொடங்கியிருக்கிறார் சச்சின்.

சச்சின் பைலட்டின் 45-வது பிறந்தநாள் நாளை (செப்.7) கொண்டாடப்படுகிறது. எனினும் நேற்றே அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், நேற்று தவுசா நகரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சச்சின் பைலட், “நாம் ஒருவரையொருவர் ஆதரிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஒருவரையொருவர் இழிவுபடுத்தாமல் இருங்கள்” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அசோக் கெலாட்டை சச்சின் பைலட் மறைமுகமாக விமர்சித்திருப்பதாகக் கருதப்படுகிறது.

2018-ல் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அமைந்ததிலிருந்தே முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் சச்சினுக்கும் இடையில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் தொடங்கிவிட்டன. ராஜஸ்தானில் 2013 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பின்னர், அம்மாநிலத்தில் கட்சியைப் பலப்படுத்த சச்சினைத்தான் முன்னிறுத்தினார் ராகுல் காந்தி. 2018 தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு சச்சினின் கடும் உழைப்பு முக்கியக் காரணியாக அமைந்தது.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்

அதன் பலனாகத் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அசோக் கெலாட்டையே முதல்வராக்கியது காங்கிரஸ் தலைமை. கையோடு, சச்சினைத் துணை முதல்வராக்கி அவரைச் சமாதானப்படுத்தியது.

நான்கு அமைச்சகங்களின் பொறுப்புகளைத் தன் வசம் வைத்திருந்த சச்சினுக்குக் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தது அசோக் கெலாட் தரப்பு. அந்தத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் நியமனத்தில் முதல்வர் நேரடியாகத் தலையிட்டது சச்சினுக்குக் கடும் அதிருப்தியைக் கொடுத்தது. உள்துறை அமைச்சகம் அசோக் கெலாட்டின் வசம் இருக்கும் நிலையில், ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருப்பதாக சச்சினும் விமர்சிக்க ஆரம்பித்தார்.

கூடவே, 6 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜஸ்தான் மாநிலக் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் சச்சின் இருப்பதை அசோக் கெலாட் தரப்பு ரசிக்கவில்லை. அந்தப் பொறுப்பிலிருந்து அவரை வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது.

2020-ம் ஆண்டுவாக்கில் இப்படியான மோதல்கள் அதிகரித்த நிலையில், சச்சின் பைலட் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்துவிடுவார் என்று பேசப்பட்டது. எனினும், அகமது படேல், கே.சி.வேணுகோபால் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் சமாதானம் பேசி அவரைச் சரிக்கட்டினர். பிரியங்கா காந்தியும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினால் அசோக் கெலாட் ஆட்சி கவிழ்ந்துவிடும் எனும் அளவுக்கு மோசமாகியிருந்த சூழல், சமாதானப் பேச்சுவார்த்தைகளால் சமரசத்தை எட்டியது.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

எனினும், சச்சின் பைலட் இன்னும் கசப்புடன் தான் இருக்கிறார். 2023-ல் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டுமானால் சச்சின் பைலட் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

நாளை ’பாரத் ஜோடோ’ பேரணிக்காக கன்னியாகுமரிக்கு ராகுல் காந்தி வரவிருக்கும் நிலையில், அவருடன் சச்சின் பைலட்டும் தமிழகம் வருகிறார். எனவே, இன்றே அவரது ஆதரவாளர்கள் ஜெய்ப்பூரில் இன்றே அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களை முன்னெடுக்கின்றனர். அவருக்கு மாலை அணிவிக்கவும் பூங்கொத்துகள் கொடுக்கவும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் கூட்டம் முண்டியடிக்கிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் அவரது படத்துடன் போஸ்டர்கள், பதாகைகள் காணப்படுகின்றன.

இப்படியான உற்சாகச் சூழலில் அவரது அரசியல் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அதிரடியான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பையே அசோக் கெலாட்டு வழங்க சோனியா குடும்பம் முன்வந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், ராகுல் காந்திதான் மீண்டும் காங்கிரஸ் தலைவராக வேண்டும் எனக் கூறி அந்த வாய்ப்பை அவர் மறுதலித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், மாநிலக் காங்கிரஸுக்குள் சச்சின் பைலட் மீண்டும் குடைச்சல் தரத் தொடங்கியிருப்பது அசோக் கெலாட்டைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in