அசோக் கெலாட்டுடன் மீண்டும் மோதும் சச்சின் பைலட்: அப்படி என்ன பிரச்சினை ராஜஸ்தான் காங்கிரஸில்?

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியில் அவருக்கு எதிராக சச்சின் பைலட் மீண்டும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார். மறுபுறம், கட்சித் தலைவராகவே ஆனாலும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கத் தான் தயாராக இல்லை என அசோக் கெலாட் உணர்த்தியிருக்கிறார்.

2018-ல் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அமைந்ததிலிருந்தே முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் சச்சினுக்கும் இடையில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் தொடங்கிவிட்டன. ராஜஸ்தானில் 2013 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பின்னர், அம்மாநிலத்தில் கட்சியைப் பலப்படுத்த சச்சினைத்தான் முன்னிறுத்தினார் ராகுல் காந்தி. 2018 தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு சச்சினின் கடும் உழைப்பு முக்கியக் காரணியாக அமைந்தது. அதன் பலனாகத் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அசோக் கெலாட்டையே முதல்வராக்கியது காங்கிரஸ் தலைமை.

இதையடுத்து, அவ்வபோது அசோக் கெலாட்டுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவருகிறார் சச்சின் பைலட். 2023-ல் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டுமானால் சச்சின் பைலட் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். செப்டம்பர் 7-ல் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அவரது ஆதரவாளர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

இப்படியான சூழலில், அக்டோபர் 17-ல் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்வாரா என இதுவரை உறுதியாகவில்லை. 2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிய ராகுல் காந்தி அதன் பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்க ஆர்வம் காட்டவில்லை. சோனியா குடும்பத்தினர் அசோக் கெலாட்டையே தலைவராகக் கொண்டுவர விரும்புகின்றனர். ஜி-23 தலைவர்களில் ஒருவரான காங்கிரஸ் எம்.பி சசி தரூரும், தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்

இந்தச் சூழலில், ஒருவேளை அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றால் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுவாரா எனும் கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக, சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களும் இதை உன்னிப்பாகக் கவனித்துவருகின்றனர்.

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுடன் பேசிய அசோக் கெலாட், தான் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவிருப்பதாகக் கூறினார். அத்துடன், “நான் உங்களையெல்லாம் விட்டு அத்தனை தூரமாகச் சென்றுவிட மாட்டேன். கவலை வேண்டாம்” என்றும் சூசகமாகத் தெரிவித்தார். அதாவது, காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டாலும் ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுத்தரப்போவதில்லை என்பதே அவர் உணர்த்த விரும்பும் செய்தி.

இதைக் காங்கிரஸ் தலைமையிடமே அவர் தெரிவித்துவிட்டதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அசோக் கெலாட்டின் இந்த முடிவால், முதல்வர் பதவியைக் குறிவைத்து காத்திருக்கும் சச்சின் பைலட் மேலும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனால், ராஜஸ்தான் காங்கிரஸில் விரைவில் கலகம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in