‘சச்சின் ஒரு துரோகி!’

ஆவேசத்தில் அசோக் கெலாட்
‘சச்சின் ஒரு துரோகி!’

ராஜஸ்தான் காங்கிரஸில் மீண்டும் சலசலப்பு தொடங்கியிருக்கிறது. ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்னர் சச்சின் பைலட்டுடனான மோதலைத் தொடர்கிறார் முதல்வர் அசோக் கெலாட். ‘சச்சின் ஒரு துரோகி’ என வசைபாடியிருப்பதன் மூலம் ஏற்கெனவே நிலவும் பிரச்சினைக்கு இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றியிருக்கிறார்.

பழைய பகை

2018 ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தல் வெற்றியில் சச்சின் பைலட்டுக்குக் கணிசமான பங்கு உண்டு. எனினும், அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை. மூத்த தலைவரான அசோக் கெலாட்டே முதல்வராக்கப்பட்டார். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே பகைமை கனன்றபடி இருந்தது. மத்திய பிரதேச காங்கிரஸிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா விலகி, ஆட்சியைக் கவிழ்த்ததைத் தொடர்ந்து, பாஜகவின் அடுத்த குறி ராஜஸ்தான் என்றும், சச்சினுக்கு அக்கட்சி வலைவிரிக்கும் என்றும் பேசப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே, 2020 ஜூலையில் சச்சின் பைலட் கலகத்தைத் தொடங்கினார். 30 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறிய அவர். தனது ஆதரவாளர்களுடன் குருகிராம் நகரில் முகாமிட்டார். மறுபுறம், 97 எம்எல்ஏக்கள் தன் இல்லத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்ததாக அசோக் கெலாட் கூறினார். இவ்விஷயத்தில், பாஜக பட்டும் படாமலும் கருத்து கூறியது. “முதல்வராவதற்கு சச்சின் தான் தகுதியானவர். ஆனால், அந்தப் பொறுப்பை அசோக் கெலாட் எடுத்துக்கொண்டார். அதனால்தான் இந்த மோதல்” என்று ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா கூறினார். எனினும், சச்சினின் ஆதரவாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கட்சித் தலைமை உறுதியளித்ததைத் தொடர்ந்து சச்சின் பைலட் காங்கிரஸிலிருந்து வெளியேறும் முடிவைக் கைவிட்டார்.

மீண்டும் முளைத்த பிரச்சினை

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. கூடவே, இந்திய ஒற்றுமைப் பயணத்தின் அடுத்தகட்டமாக ராஜஸ்தானுக்குச் செல்லவிருக்கிறார் ராகுல் காந்தி. இப்படி ஒரு முக்கியமான காலகட்டத்தில் சச்சின் பைலட்டை வசைபாடத் தொடங்கியிருக்கிறார் அசோக் கெலாட்.

2020-ல் சச்சின் கலகம் செய்ததன் பின்னணியில், அமித் ஷா இருந்ததாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். குருகிராமில் சச்சின் தனது ஆதரவாளர்களுடன் ஒரு மாத காலம் தங்கியிருந்தபோது, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அங்கு சென்று அவர்களைச் சந்தித்ததாகவும், சச்சின் உட்பட அனைவருக்கும் தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் அசோக் கெலாட் கூறிவருகிறார். வழக்கம்போல் இந்தக் குற்றச்சாட்டுகளை சதீஷ் பூனியா மறுத்திருக்கிறார்.

இவ்விஷயத்தில் தொடர்ந்து பிடிவாதம் காட்டும் அசோக் கெலாட், தனக்குப் பதிலாக, 10 எம்எல்ஏ-க்களில் ஒருவரை முதல்வாராக்கலாம் என்றும், சச்சினுக்கு மட்டும் ஒருபோதும் அந்த வாய்ப்பு தரப்படக் கூடாது என்றும் கொந்தளிக்கிறார். இத்தனை செய்த பின்னர், கட்சியினரிடம் ஒருமுறை கூட சச்சின் மன்னிப்பு கோரவில்லை என்றும் அவர் குமுறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தலில், அசோக் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. சோனியா காந்தி குடும்பத்தின் அபிமானத்தைப் பெற்றவர் என்பதால் தலைவர் பதவி நிச்சயம் அவருக்குத்தான் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அப்படி ஒரு வாய்ப்பு காத்திருந்த நிலையிலும், ராஜஸ்தான் முதல்வர் பதவி சச்சினின் கைக்குச் சென்றுவிடக் கூடாது என அசோக் கெலாட் பிடிவாதம் காட்டினார். இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்த ராஜஸ்தான் சென்ற மூத்த தலைவர்களான அஜய் மாக்கன், மல்லிகார்ஜுன கார்கே  ஆகியோரை அசோக் கெலாட்டின் 90 சொச்ச ஆதரவாளர்கள் சந்திக்காமல் புறக்கணித்தனர்.

அவர்கள் அனைவரும் சச்சின் செய்த கலகத்தின்போது காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்றியவர்கள் என்று கூறியிருக்கும் அவர், “அவர்கள் என்னுடைய விசுவாசிகள் அல்ல, கட்சித் தலைமையின் விசுவாசிகள்” என்றும் விளக்கமளித்திருக்கிறார்.

மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் நடைப்பயணத்தில் இருக்கும் சச்சின் பைலட், இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

பஞ்சாபில் இப்படி உட்கட்சி மோதல் உச்சகட்டமடைந்தது காங்கிரஸின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in