விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு: காணாமல்போன முதியவர் மரணம்?

ஆசிரமத்தில் சிபிசிஐடி ஆய்வு  -கோப்பு படம்
ஆசிரமத்தில் சிபிசிஐடி ஆய்வு -கோப்பு படம்

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல்போன முதியவர் இறந்திருக்கலாம் என, சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் அன்பு ஜோதி ஆசிரமம் செயல்பட்டு வந்தது. ஆசிரமத்தில் சேர்க்கபட்டிருந்த ஆதரவற்றோர் பலர் காணாமல் போனது தொடர்பாகவும், அங்கு நடைபெற்றதாக சொல்லப்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகவும் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் அந்த இல்லத்தில் சேர்க்கபட்டிருந்த, திருப்பூரை சேர்ந்த 70 வயதாகும் சபீருல்லா என்பவரை காணவில்லை என்ற புகார் எழுந்தது. அவரை மீட்டுத் தரக்கோரி, அமெரிக்காவில் உள்ள அவரது உறவினர் சலீம்கான் சார்பாக ஹலிதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தர் மற்றும் நிர்மல்குமார் வசம் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சபீருல்லா காணாமல் போன வழக்கு தொடர்பாக சிபிசிஐடியின் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதில், அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கபட்ட சபீருல்லா, பெங்களூருவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கபட்டதாகவும், அங்கிருந்து அவர், தப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பெங்களூருவில் உள்ள பத்ராவதி என்னுமிடத்தில்  உள்ள மசூதியின் முன் கண்டெடுக்கப்பட்ட முதியவர் ஒருவரின் சடலம், சபீருல்லா கானின் அடையாளங்களுடன் ஒத்துபோவதாகவும், அந்த உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சபீருல்லா சடலத்தின் புகைப்பட ஆதாரங்கள் உள்ளதால், சலீம் கான் நேரில் வந்து அடையாளம் காட்டவேண்டும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதையடுத்து, சலீம் கான் நேரில் வந்து அடையாளம் காட்டுவது தொடர்பாக விளக்கமளிக்க 2 வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும், ஆசிரமத்தைச் சேர்ந்த எட்டு பேரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்கப்பதற்கும் நீதிபதிகள் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in