மண்டலகால தரிசனத்திற்குப் பின்பு மூடப்பட்ட சபரிமலை நடையானது, மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் நாளை மாலை திறக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக நாளை மாலை நடை திறக்கப்படுகிறது. மகரவிளக்கு காலத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்பதால் சபரிமலையில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்துவருகிறது. அந்தவகையில் இப்போது பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பைப்லைனில் சீரமைப்புப் பணிகள் நடந்துவருகிறது.
சீனாவில் தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மத்திய அரசும், மாநில அரசுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சுகாதாரத்துறையும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மகரவிளக்கு பூஜைக்காக வரும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துவர வேண்டும் என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பம்பை ஆற்றில் பக்தர்கள் நெருக்கடி இன்றி குளிப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவைக் குறித்து வழிகாட்டுதல் தொடர்பாகவும் கேரள அரசு, சுகாதாரத்துறையினருடன் ஆலோசித்து வருகிறது.