
ஜன.14-ம் தேதி சபரிமலை மகரஜோதி காண வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து தமிழக, கேரள போலீஸார் ஆலோசனை நடத்தினர்.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 48 நாள் விரதமிருந்து சபரிமலை யாத்திரை சென்று ஒவ்வொரு ஆண்டும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நடப்பாண்டு மாலை அணிந்த பக்தர்கள் மகர ஜோதி பூஜை அன்று வரும் ஜன.14-ல் சபரிமலையில் ஜோதி தரிசனம் செய்ய உள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு மகர ஜோதி தரிசனத்தின் போது குமுளி அருகே புல்மேடு பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்தனர். வரும் ஜன.14-ம் தேதி மகரஜோதி பூஜையின் போது புல்மேட்டிலும் பக்தர்கள் கூடுவர்.
அப்போது கூட்ட நெரிசல், அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து தமிழக, கேரள போலீஸாரின் ஆலோசனை கூட்டம் குமுளி பாம் குரோவ் கூட்ட அரங்கில் இன்று நடந்தது.
தேனி எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ், இடுக்கி எஸ்.பி குரியாகோஷ் மற்றும் தமிழக, மாநில போலீஸார் பங்கேற்றனர். புல்மேடு பகுதியில் பாதுகாப்பு, குடிநீர், கழிவறை, சீரான பாதை வசதிகள், குமுளி, வண்டி பெரியாறு, சத்திரம் பகுதிகளில் தேனி மாவட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுதல் என முடிவுகள் எடுக்கப்பட்டன.