சபரிமலை தரிசனம்: குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் இல்லை!

சபரிமலை தரிசனம்: குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் இல்லை!

கார்த்திகை மாதம் விரதம் இருந்து சபரிமலைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். நிகழாண்டில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக இணையவழியில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் குழந்தைகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு ஐயப்பன் நைஸ்டிக பிரம்மச்சாரி கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு கார்த்திகை மாதத்தைக் கணக்குவைத்து ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, மாலை அணிந்து செல்வது வழக்கம். கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரு ஆண்டுகளாக பக்தர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இப்போது தொற்றுப்பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதால் கட்டுப்பாட்டு விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

கார்த்திகை மாத தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது டிசம்பர் 16-ம் தேதி மாலையில் திறக்கப்படுகிறது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்த்து ஏனையவர்களுக்கு இணைய வழி முன்பதிவு கட்டாயம் என கேரள தேவசம்போர்டு நேற்றுமாலை அறிவித்துள்ளது. இந்த ஆன்லைன் முன்பதிவிற்கு கட்டணம் எதுவும் கிடையாது என தேவசம்போர்டு தலைவர் பிரகாஷ் தெரிவித்தார்.

இதேபோல் நிலக்கல் உள்பட 12 மையங்களில் இணைய வழியில் புக்கிங் செய்யாதவர்களுக்கு, ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக கேரள அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in