இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை: சவுதியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்தது ரஷ்யா

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை: சவுதியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்தது ரஷ்யா

உக்ரைன் இன்னும் முடிவுக்கு வராத சூழலில், மே மாதத்தில் சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் சப்ளையராக ரஷ்யா மாறியுள்ளது.

கடந்த மே மாதத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் சப்ளையராக ரஷ்யா உயர்ந்தது. சவூதி அரேபியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஆனால், இப்போதும் இந்தியாவுக்கான எண்ணெய் ஏற்றுமதியில் ஈராக் முதலிடத்தில் உள்ளது என்று வர்த்தக ஆதார தரவுகள் தெரிவிக்கின்றன.

மே மாதத்தில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் நாளொன்றுக்கு சுமார் 8,19,000 பீப்பாய்கள் (பிபிடி) ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்துள்ளன. இது இதுவரை எந்த மாதத்திலும் இல்லாத அதிகபட்ச அளவாகும்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷ்யா இந்தியாவுக்கு சலுகை விலையில் எண்ணெய்யை வழங்கிவருவதால் இந்த இறக்குமதி திடீர் உச்சத்தைத் தொட்டுள்ளது. அதிக சரக்கு போக்குவரத்து செலவுகள் காரணமாக ரஷ்ய எண்ணெய்யை அரிதாகவே வாங்கும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள், தற்போது குறைந்த விலை காரணமாக அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றன.

மே மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்களிப்பு 16.5% ஆக உயர்ந்தது. எனவே, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் எண்ணெய்யின் பங்கு சுமார் 59.5% ஆக குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மே மாதத்தில் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி முந்தைய மாதத்தை விட 5.6% அதிகமாகவும், முந்தைய ஆண்டை விட 19% அதிகமாகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோர் ஆகும். இந்தியா தனது மொத்த தேவையில் 85% எண்ணெய்யை இறக்குமதி செய்வது குறிப்பிடத் தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in