‘காங்கிரஸில் சிலருக்கு மட்டுமே விதிமுறை... மற்றவர்களுக்கு விதிவிலக்கு’ - கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ கடும் தாக்கு!

குல்தீப் பிஷ்னோய்
குல்தீப் பிஷ்னோய்

மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களித்த ஹரியாணா காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னோய் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘காங்கிரஸில் சிலருக்கு மட்டுமே விதிமுறைகள் இருக்கின்றன. மற்றவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது’ என அவர் விமர்சித்திருக்கிறார்.

ஹரியாணாவிலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன் தோல்வியடைந்தார். ஹரியாணாவிலிருந்து பாஜகவைச் சேர்ந்த கிருஷ்ணன் லால் பன்வாரும், பாஜக ஆதரவில் சுயேச்சையாகப் போட்டியிட்ட கார்த்திகேய ஷர்மாவும் வெற்றியடைந்தனர். இதில், கார்த்திகேய ஷர்மாவுக்கு ஆதரவாக குல்தீப் பிஷ்னோய் வாக்களித்தது காங்கிரஸ் கட்சியினரைக் கோபத்தில் ஆழ்த்தியது. அவரது வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று ஹரியாணா காங்கிரஸார் கோரிய நிலையில், நேற்று (ஜூன் 12) அவர் மீது நடவடிக்கை பாய்ந்தது. காங்கிரஸ் செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.

ஆதம்பூர் தொகுதி எம்எல்ஏ-வான குல்தீப் பிஷ்னோய், முன்னாள் முதல்வர் பஜன் லாலின் மகன். ஹரியாணாவில் ஜாட் சமூகம் அல்லாத பிற சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவராகக் கருதப்படுபவர்.

இந்நிலையில், இது தொடர்பாக ட்வீட் செய்திருக்கும் குல்தீப் பிஷ்னோய், ‘காங்கிரஸில் சில தலைவர்களுக்காக மட்டுமே விதிமுறைகள் உள்ளன. மற்றவர்களுக்கு அதில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. விதிமுறைகள் வெவ்வேறு விதமாக வெவ்வேறு நபர்களுக்கு அமல்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்பு ஒழுங்கீனச் செயல்கள் பல முறை அலட்சியம் செய்யப்படிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை, எனது ஆன்மாவின் குரலுக்கு ஏற்ப, எனது தார்மிக உணர்வின் அடிப்படையில் வாக்களித்தேன்’ என அதில் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, குல்தீப் பிஷ்னோய் தனது மனசாட்சிக்கு மதிப்பளித்து வாக்களித்திருக்கிறார் என்று கூறியிருக்கும் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர், அவர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்பதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து ஹரியாணா அரசியல் களத்தில் சலசலப்பு எழுந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in