மாணவிக்கு மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம்: சிறார் வழக்குகளை கையாள விதிமுறை வகுக்க உத்தரவு!

மாணவிக்கு மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம்: சிறார் வழக்குகளை கையாள விதிமுறை வகுக்க உத்தரவு!

சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது தொடர்பாக விதிமுறைகள் வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு, சக மாணவர் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டுவது போன்ற காட்சிகள், சமூக வலைதளத்தில் பரவியது. இதுதொடர்பாக மாணவனுக்கு எதிராக சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது.

இதையடுத்து மாணவியை மீட்கக் கோரி மாணவியின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவியை உடனடியாக விடுவித்து பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கைது செய்யப்பட்ட மாணவன், சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டதாகவும், தற்போது அவரும் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குறைந்தது ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் இழைத்திருந்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்யவேண்டும் என சிறார் நீதிச் சட்டத்தில் கூறியுள்ள நிலையில் மாணவனை கைது செய்தது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது தொடர்பாக விதிமுறைகள் வகுக்க வேண்டும் எனத் தெரிவித்து, நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் இ.வி.சந்துருவை நியமித்து, இதுசம்பந்தமான உச்ச நீதிமன்ற உத்தரவுகளை குறிப்பிட்டு கருத்துகளை, இரண்டு வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அதேபோல, இதுசம்பந்தமாக கருத்துகளைப் பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி, தமிழக உள்துறைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், மகளிர் நலத்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in