ரூ.10 கோடி பணிகளுக்கு டெண்டர்... 2-வது முறையாகவும் டெண்டர் ஒத்திவைப்பு: பழநியில் திமுகவினர் அட்டகாசம்!

ஒப்பந்ததாரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த வாக்குவாதம்.
ஒப்பந்ததாரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த வாக்குவாதம்.

பழநி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு இன்று டெண்டர் விடப்பட்ட நிலையில், டெண்டரில் கலந்து கொள்ளவதற்காக வந்த ஒப்பந்ததாரர்களை, ஒரு தரப்பினர் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் 8 பணிகளுக்கு சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான டெண்டருக்கு, கடந்த மாதம் 27-ம் தேதி ஏலம் நடைபெறவிருந்தது. ஆனால், அப்போது டெண்டர் கோர வந்த ஒரு தரப்பினரின் கார் கண்ணாடிகளை, திமுகவினர் சிலர் உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் ஏலம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மாலை 3 மணி வரை டெண்டர் போட பொதுப்பணித்துறையினர் அனுமதி அளித்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள்

மேலும், கடைசி நாளான இன்று பல்வேறு ஊர்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்க வந்தனர். அப்போது, டெண்டர் போடுவதற்கு ஒப்பந்ததாரர்கள் வந்தபோது, அலுவலக வாயிலிலேயே பழனி நகராட்சி கவுன்சிலர் வீரமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட திமுகவினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒப்பந்ததாரர்கள் கையிலிருந்த டெண்டர் பையை கவுன்சிலர் வீரமணி பிடுங்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளானது.

இதைக் காவல்துறையினர் கண்டும் காணாமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்ததை அடுத்து ஆவேசமடைந்த ஒப்பந்ததாரர்கள் பழநி-திண்டுக்கல் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒப்பந்தக்காரர்கள் அனைவரையும் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்குள் அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் கேட்டபோது, அனுமதி மறுத்ததால் காவல்துறையினருக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து ஒப்பந்ததாரர்களை காவல்துறையினர் கலைந்துபோகக் கூறினர். ஆனால், அவர்கள் மறுத்ததுடன் பாதுகாப்பு தரவேண்டிய காவல்துறையினர் ஒருதரப்பிற்கு சாதகமாக நடந்து கொள்வதாக மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒப்பந்ததாரர்களைக் காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இப்பிரச்சினையால் தேதி குறிப்பிடப்படாமல் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின் ஒப்பந்ததாரர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in