‘பிரதமர் மோடி, மக்கள் வரிப் பணத்திலிருந்து ஒரு ரூபாய்கூட எடுக்கவில்லை’

அடித்து சொல்லும் ஆர்டிஐ
‘பிரதமர் மோடி, மக்கள் வரிப் பணத்திலிருந்து ஒரு ரூபாய்கூட எடுக்கவில்லை’

பிரதமர் மோடி தனது மருத்துவ செலவினங்களுக்காக இதுவரை ஒரு ரூபாய் கூட, மக்கள் வரிப்பணத்திலிருந்து எடுக்கவில்லை என ஆர்டிஐ தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

பிரதமர் மோடி தனது தனிப்பட்ட மருத்துவ செலவினங்கள் மற்றும் ஆரோக்கிய பராமரிப்புக்கான செலவினங்கள் அனைத்தையும் சொந்த செலவிலேயே மேற்கொள்கிறார் என்றும், அரசுப் பணத்தில் ஒரு ரூபாய்கூட கோரவில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது.

புனேவை சேர்ந்தவர் பிரஃபுல் சர்தா. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான இவர், அண்மையில் பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு ஆர்டிஐ மனு அனுப்பியிருந்தார். ’மக்கள் வரிப் பணத்திலிருந்து பிரதமர் மோடி, தனது ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவினங்களுக்கு இதுவரை எவ்வளவு தொகை எடுத்திருக்கிறார்’ என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

பிரதமர் அலுவலகத்தின் செயலர் பினோத் பிஹார் சிங் அளித்த பதிலில், ‘மேற்படி செலவினங்களை தன்னுடைய சொந்த வருமானத்திலிருந்தே பிரதமர் மோடி சமாளிக்கிறார் என்றும், மக்கள் வரிப்பணத்திலிருந்து 1ரூ கூட எடுக்கவில்லை' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ’மருத்துவ செலவினங்கள் மட்டுமன்றி, வேறெந்த தனிப்பட்ட செலவுகளுக்கும் மக்கள் வரிப்பணத்தில் பிரதமர் மோடிக்கு செலவிடப்படவில்லை. மோடி பிரதமராக பதவியேற்ற 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை இதுவே நீடிக்கிறது’ என்றும் அந்த பதிலில் பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த தகவலை பொதுவெளியில் பகிர்ந்து ஆர்டிஐ ஆர்வலர் பிரஃபுல், ’கட்டுக்கோப்பான ஆரோக்கிய பேணலில் பிரதமர் மோடியை நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும். மேலும், ஆரோக்கியம் உட்பட சகல தேவைகளுக்கும் மக்கள் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட கோராத பிரதமர் மோடியை இதர அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பின்பற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in